பக்கம்:கனிச்சாறு 8.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘பேச்சாலும் எழுத்தாலும் பாட்டாலும் கூத்தாலும்
பிறர் உவக்க
ஓச்சுகவே மணிமுரசு! வீதியெலாம் வரிசையுற
உலவா நிற்பீர்!
ஏச்சாலும் எதிர்ப்பாலும் வருகின்ற இன்னலுக்குள்
இன்ப வெள்ளம்
பாய்ச்சாதோ பொதுத்தொண்டு? பைந்தமிழ்க்குச் செயுந்தொண்டு
பருக வாரீர்!’


தமிழியக்கம் எனும் ஒரு நூல் தாமியற்றித் தமிழர்களைத்
தணலச் செய்தார்!
நமில்நாமே ஒருவரையிங் கொருவரெனும் விழுக்காட்டில்
தாழ்த்திச் சென்றால்
நமிலுயர்வு காண்பதென்றோ? நந்தமிழீர் தமிழொன்றால்
நாமி ணைந்தால்
உமியன்றோ பெரும் பகையும்? உகக்காதோ பெருவெற்றி?
உணர்வீ ரென்றே

பாவேந்தர் குரல்கொடுத்தார் பல பாக்கள் குயிலேட்டில்
பாடித் தீர்த்தார்!
ஈ.வே.ரா.தொடங்குபகுத் தறிவியக்கக் கொள்கைகளை
எடுத்துக் காட்டிச்
சாவேந்துந் தமிழர்க்கோர் கலங்கரையின் ஒளிவிளக்காய்
நின்றார்; அன்னார்
ஈவேந்தி நிற்பதனால் தமிழர்நிலை இமிஇமியாய்
ஏறிற் றின்றே!

தூங்கிக் கிடந்த தமிழர் தோள்களை
வீங்க வைத்தன பாவலர் பாக்கள்!
வாடிக் கிடந்த தமிழர் நரம்பினில்
ஓடிக் கிளர்ந்தது செந்தமிழ்க் குருதி!
அடைத்துக் கிடந்த தமிழரின் உணர்வுகள்
புடைத்துப் பொருமின பாவலர் பாவால்!
பாரதி தாசன் புரட்சிப் பாவலன்!
ஊரதிர் வுண்டதே அன்னவன் உணர்வால்!
மூலை முடுக்கெலாம் அதிர்ந்த தவன்குரல்!


‘வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/34&oldid=1447640" இலிருந்து மீள்விக்கப்பட்டது