பக்கம்:கனிச்சாறு 8.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


எண்ணுங்கள்! எண்ணி இழிவுயர்வு காணுங்கள்!
மண்உங்கள் மண்! மற்றும் மாத்தமிழும் உங்களது!
தாய்மொழியைப் பேணினமா? பேணத் தவறினமே!
காய்மொழியைக் கொண்டோம்; கனிமொழியை விட்டுவிட்டோம்!
எந்த அறிவியலிங் கேற்காது செந்தமிழ்க்கே!
அந்த அறிவியலைச் செய்யஅறி வற்றோமா?

கூறுங்கள்; என்னுடைய கூற்றில் குறையிருந்தால்
மீறுங்கள்; நீங்கள் மிதித்தவழி யான்நடப்பேன்!

மாணவரைச் சொன்னேன்; நம் மாணவரைத் தோற்றுவிக்கும்
பூணவராம் ஆசிரியர்! அன்னார் புகல்வதென்ன?

பேரா சிரியப் பெருமக்கள் எல்லாரும்
சீராகச் செந்தமிழ்க்குச் சீர்செய்ய எண்ணு வரேல்
இன்பத் தமிழ்மொழிதான் மேன்மையினை எய்தாதா?
முன்பிருந்த வாழ்க்கை முழுவாழ்க்கை இல்லையா?
இன்றா தமிழன் எழத்தொடங்கி நிற்கின்றான்?
ஒன்றா இரண்டா? உயர்நூற்கள் எத்தனையோ?
அன்னவற்றில் எல்லாம் அருந்தமிழன் வாழ்விலையா?
சொன்னவற்றில் என்ன பிழைகண்டீர் சொல்லுங்கள்.
ஆசிரியன் மாரை அறைகூவிக் கேட்கின்றேன்.
காசிற் குழைத்தீர்; கருத்திற் குழைத்தீரா?
தாய்த்தமிழ் என்ன தரங்குறைந்து விட்டதென்பீர்!
வாய்மொழிப்போ ராட்டம் நடத்த வருவீரா?
ஆங்கிலமே நல்ல அறிவியலைச் செய்யுமெனில்
ஈங்கிருக்கும் சப்பான், எதிரிருக்கும் சீனம்,
உருசியா போன்ற உலக நாடெல்லாம்
பெருமை அறிவியலை ஆங்கிலத்தா பேசுகின்றார்?
தாய்மொழியில் அன்றோ அறிவியலைத் தாங்கற்பர்!
தாய்மொழி யன்றோ உள்ளுணர்வு தாங்கொளுத்தும்!
ஆகவே கல்வி சொல் ஆசிரியர் எல்லாரும்
ஈகை உளத்தாலே எந்தமிழ்க்கு மேன்மைசெய்தால்
நாமும் உயர்ந்திடலாம்; நாடும் உயர்ந்துவிடும்!
ஊமைக்கும் கல்வி சொல்லும் காலமிது; ஓர்ந்துணர்வீர்!
மற்றுந் தொழிலாளர் மாப்பணியில் ஒன்று. தமிழ்
கற்றுப் பெருமையுறல்! காற்றைக் கடந்துசெல்லும்
காலத்தில் வாழ்கின்றோம்! வெண்ணிலவில் கால் வைத்தோம்!
ஞால உருண்டையினை நாளொன்றில் சுற்றுகிறோம்!
ஆனாலும் உள்ளத் தமைதியிலை; மக்களுக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/60&oldid=1447922" இலிருந்து மீள்விக்கப்பட்டது