பக்கம்:கனிச்சாறு 8.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்.’

- என்பான் புலமை இறுமாப் போடு!
தன்பாத் திறத்தைத் தனித்தனி யாகச்
சொன்னால் அஃதொரு சுவைதரு விருந்தாம்!
என்னால் முடியுமோ இல்லையோ! எதற்கும்
இயன்ற வரைநான் எடுத்துக் கூறிட
முயன்று பார்க்கின்றேன். முடிவது முடிக!

பாவலர் ஒருவர்க்குப் பதின்திறம் வேண்டும்.
நுண்ணோக்கு, கற்பனை, உவமை, பாத்திறன்,
எண்ணும் இயற்கை ஈடுபாடு, உலகியல்,
மனவியல் அறிவு, மற்றுமொழி யறிவு,
புரட்சி யுள்ளம், பொதுவுணர்வு - இவற்றில்
வரட்சி யில்லா மனநிலை வேண்டும்!
பார்க்கும் பொருளெலாம் பசையொடு நோக்கி
ஆர்க்கும் அழகை அறியும் நற்றிறன்
புலவோர்க் கல்லால் புறத்தார்க்கு வருவதில்!
பலவோர் புலவராய்ப் பயின்று திரியலாம்!
உண்மைப் புலவோர்க்கு உள்ளமும் அறிவும்
நுண்மையாய்ப் படிந்து நோக்குதிறம் வேண்டும்!

எல்லாப் பொருளையும் யாவரும் பார்க்கலாம்.
எல்லார்க்கும் அவற்றின் இயல்புகள் தெரியா!
மாலைப் பொழுதை நாளும் பார்க்கிறோம்?
வேலை யிருந்ததா, நமக்கந்த வேளையில்?
பாவேந்தர் மாலையைப் பார்ப்பதைப் பாருங்கள்;
நாவேந்திச் சொன்னால்தான் நல்லது தெரியும்!

‘அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்;
அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே, நீதான்?
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேயியற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணந் தானோ?’

எப்படி அவர்க்கு மாலை இருந்தது?
அப்படி நாமதை அறிந்திட வில்லையே!
காரிருள் நிலவைக் ‘கவின்நிலா’ வென்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/66&oldid=1447945" இலிருந்து மீள்விக்கப்பட்டது