பக்கம்:கனியமுது.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கத்துகின்ற அலைபுரளுங் கடல்க டந்தும்
கணக்கற்ற பொருள்தேடல் கடமை என்று,
முத்தப்பன் இளமையிலே மலாயா சென்றான்.
மூன்றாண்டு முதுகொடியப் பாடு பட்டுச்
சொத்துகளை ஓரளவு சேர்த்துக் கொண்டு,
சொந்தவூர் திரும்பி வந்தான் தாயைக் காண!
பித்துடைய பெற்றமனம் மூப்பை எண்ணிப்
பிள்ளைக்கோர் பெண்பார்த்து மணம்மு டித்தாள்.


கரிய நிறம் ஆனாலும் கவர்ச்சிப் பாவை,
கண்முதலாம் ஐம்புலனும் நுகர்தற் கேற்றாள்.
புரியவில்லை இருதிங்கள் போன மாயம்!
புதுமணத்துப் பின்விளைவும் உருவ மாகப்
பிரியவொரு பிரியமில்லை; எனினும், ஆங்கே
பெற்றுவந்த அனுமதிநாள் தீர்ந்த தாலே,
அரியதிருத் தாயார்க்குத் துணையாய் விட்டே

அயல்நாடு புறப்பட்டான்; கயற்கண் ஏங்க!

1

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/12&oldid=1459277" இலிருந்து மீள்விக்கப்பட்டது