பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப் பாறை

5

காய்த்து முற்றி விளைவுற்ற கொடி, தமிழகத்திலே மலர்ந்தது என்பதையோ, கன்னடத்திலே மூல விதையூன்றிய தென்பதையோ அவர் கனவிற்கூடக் காண முடியவில்லை. ஒரு வேளை, அக் காட்சியை அவர் மறக்க எண்ணியிருக்கலாம். சிவாஜியின் மரபுக்கும், நானா சாகிபுக்கும் இடையேயுள்ள போலி மரபு பேஷ்வா மரபு. அது கன்னடத்தின் விடுதலைப் போராட்டத்திடையே கொண்ட பங்கை அவர் வீர வரலாற்றுக் கண் காண விரும்பியிருக்க முடியாது. அது அவர் விழுமிய மராட்டிய உள்ளத்தை உள்ளூர உறுத்தி இருக்கக்கூடும்!

மராட்டிய மண்டலத்தின் வேற்றுமைப் பிணக்கு, ஐதராபாதை ஆண்ட நிஜாமின் கோழை அடிமைத்தனம், ஆர்க்காட்டு நவாபு மகமதலியின் குள்ள நயவஞ்சகச் சூழ்ச்சிகள், கிலி கொண்ட திருவாங்கூர் மன்னர் மரபின் ஆங்கில ஆதிக்க நேசம்—இத்தனை இருள்கள் சூழ்ந்த தென்னாட்டின் அந்நாளைய வாழ்விலே, வீறொளி பரப்பிய வீர சோதி, ஹைதர்! அவன் வாழ்க்கை வரலாறு தென்னாட்டவர் உள்ளங்களை, சிறப்பாக வீரம் கருக் கொள்ளும் நிலையில் உள்ள இளைஞர் உள்ளங்களை ஈர்க்கும் தன்மையுடையது. அது காலத்தின் செல்வம். காலந்தாண்டி ஞாலத்துக்கு வழிகாட்டும் சீரிய பண்பு அதற்கு உண்டு.

வரலாற்றில் மறைக்கப்பட்டிருந்த பொன்னேடு பாஞ்சாலங் குறிச்சி. ஆண்ட அயலார் அதைக் கற்பனைக் கண் கொண்டு பார்க்கவும் அஞ்சினர். 19-ம் நூற்றாண்டின் வாயிலில், அவர்களை எதிர்கொண்டழைத்த அந்நிகழ்ச்சியின் நிழலைக் கூட, அவர்கள் வரலாற்றில் குறிக்கவில்லை. அதன் பின் 1857-ல் எழுந்த வீர ஏட்டையோ, அவர்கள் திரித்துக் கூறி அமைந்தனர். ஆனால், ஹைதர் வாழ்வை அவர்கள் திரித்துக் கூறவில்லை; மறைக்கவில்லை; அதை அவர்கள்