பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்

99

ஹைதர் ஆஜானுபாகு அல்ல. அழகனல்ல. அவன் நடுத்தர உயரமும், கருநிற மேனியும் உடையவன். ஆயினும், அவன் உடல் கட்டுரம் வாய்ந்தது. கடு உழைப்பால், அது எளிதில் களைப்படைந்ததில்லை. தோல்விகளால் துவண்டதில்லை. உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றின் திருவுருவாக அது திகழ்ந்தது. இவ் எளிய தோற்றத்துக்கேற்ப, அவன் எவருக்கும் எளியவன். எவருடனும் எளிதில் பழகி, இயல்பாக உரையாடி மகிழ்பவன். தென்னாட்டவர்க்கு இயல்பான மீசையையோ, முஸ்லீம்களுக்கு வழக்கமான தாடியையோ, அவன் வைத்துக் கொள்ளவில்லை. இப்பழக்கங்களால் அவன் எளிய தோற்றம், இன்னும் எளிமையுற்றது என்னலாம்.

ஹைதரின் கூரிய, சிறிய கண்கள், அவன் நுணுகிய இயற்கை அறிவுத் திறத்துக்குச் சான்று பகர்ந்தன. வளைந்த சிறு மூக்கு இயல்பான அவன் ஆளும் திறத்தையும், கண்டிப்பையும் எடுத்துக் காட்டின. தடித்த அவன் கீழுதடு, அவன் நெஞ்சழுத்தத்துக்கும், உறுதிக்கும், விடாப்பிடிக்கும் சின்னங்களாய் அமைந்தது.

அணிமணிகளையோ, பட்டாடை, பொன்னாடைகளையோ, ஹைதர் மிகுதி விரும்பியதில்லை. ஆயினும், அவன் உடையமைதியில் மிகுதி கருத்துச் செலுத்தியிருந்தான். வெள்ளைச் சட்டையையே அவன் விரும்பி அணிந்தான். பொன்னிறப் பூ வேலை, பொன் சரிகை அருகு ஆகியவற்றில் அவனுக்குப் பற்று மிகுதி. அச்சடிப் புள்ளி அல்லது புள்ளடி இட்ட சீட்டிகளை, சிறப்பாக பர்ஹாம்பூரில் நெய்த நேரியல்களை அவன் ஆர்வத்துடன் மேற்கொண்டான். கால்சட்டைகளும், இதே வகையான, மசூலிப்பட்டணம் துணிகளால் அமைந்திருந்தன. வேண்டும் போது, நாடாக்களால் இறுக்கக் கட்டியும், மற்றச் சமயங்களில் நடுவே திறந்து விடவும் தக்க