பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்

101

வெறுப்புப் பற்றிய மட்டில், அவன் இனிப்பை அவ்வளவாக விரும்பியதில்லை என்றே கூற வேண்டும். புளிப்பு, கைப்புச் சுவைகளையே மிகுதி விரும்பினான். நிறை உணவு முடிவிலே, அவன் சோறும், பருப்புமே உண்ணும் விருப்புடையவனாயிருந்தான்.

பயணங்களிலும், போர் நடவடிக்கை நேரங்களிலும், அவன் சேமம் செய்து கொண்டு வரப்பட்ட அரிசி அல்லது கேப்பை அடையையே உண்டான். அத்தகைய உணவை உண்பதில், பொதுப் படை வீரர் கூடச் சவித்துக் கொள்வதுண்டு. அவன் சலித்துக் கொள்வதில்லை.

அரசிருக்கையில் கொலு வீற்றிருக்கும் பெருமித ஆடம்பரத்தை மன்னரும், மக்களும் விரும்புவதுண்டு. மன்னர் அவற்றில் பெருமை கொள்வதும் உண்டு. ஹைதர் மக்களுக்கான இன்றியமையாத வேளைகளிலன்றி, மற்ற சமயங்களில் அவற்றை விரும்புவதில்லை. ஆனால், மைசூரில் ஹைதருக்கு முன்னாளிலிருந்து இந்நாள் வரை, அரச மரபினர், தசராக் கொண்டாட்டத்தில் மிகவும் ஈடுபட்டு வந்துள்ளார்கள். மக்களுக்கும் அது ஒரு தேசீயப் பெருவிழா ஆக இருந்து வந்துள்ளது. ஹைதர் முஸ்லீமானாலும், பழைய அரச குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவும், மக்களுக்குரிய சமயப் பற்றுக்கும், எழுச்சிக்கும், ஊக்கமளிப்பதற்காகவும் அத்தருணத்தில் தனிச் சிறப்பான கொலு நடத்துவது வழக்கம்.

நாடகங்களும், படக் காட்சிகளும் இந்நாளில், பொது மக்கள் பொழுது போக்காக மலிந்துள்ளன. ஹைதர் நாட்களில், இத்தகைய பொதுப் பொழுது போக்குகள் மிகக் குறைவே. விலங்குக் காட்சிகள், பொருட்காட்சிகள் கூட இன்றளவு அன்று பெரும் பழக்கமாயில்லை. மற்போர், குத்துச் சண்டை, விலங்குப் போர் ஆகியவையே இவற்றினிடமாக