பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்

103

அவன் உள்ளத்தில் வஞ்சகமும், பகைமையும் கிடையாது. ஆனால், கோபத்தில் கடுந்திட்டும், வசவும், நையாண்டியும் அவனிடம் ஏராளம். அதே சமயம், நெருங்கிய நண்பர்கள், வீரப் படைத் தலைவர்கள் எதிர்த்துத் திட்டினாலும், நையாண்டி செய்தாலும், பொறுத்துக் கொள்ளும் பண்பு அவனிடம் உண்டு. அரசியல் காரியங்களில், அவன் மிகுதி பேசுவதில்லை. ஆனால், பேசும் போது, கண்டிப்பும், அறிவுச் செறிவும் மிகுதியிருந்தது. அவன் கருத்துக்களை, அவன் கீழ்ப்பட்ட பணியாளர்களும், நண்பர்களும் மட்டுமன்றி, அறிஞர்களும், தனித் துறைகளின் வல்லுநர்களும் மதித்தார்கள்.

இளமையில், ஹைதர் பள்ளியில் நிழலுக்குக் கூட ஒதுங்கியது கிடையாது. இது காரணமாக, அந்நாளைய முஸ்லீம் அரசர் அரசியல் மொழியாகிய பாரசீக மொழியிலோ, தாய் மொழியாகிய கன்னடத்திலோ ஹைதருக்கு எழுத்தறிவு கிடையாது. பத்திரங்களிலும், ஒப்பந்தங்களிலும், கட்டளைத் தாள்களிலும் கையொப்பமிடும் போது, அவன் பாரசீக மொழியில், ‘ஹைதர்’ என்ற பெயரின் முதலெழுத்தான ‘ஹை’ என்பதை மட்டும் எழுதப் பழகியிருந்தான். அந்த எழுத்தைக் கூட, அவன் தலை மாற்றியும், ஒரு தடவைக்கு இரு தடவையாகவும் எழுதினான்.

எழுத, வாசிக்கத் தெரியாத காரணத்தினால், ஹைதருக்கு வாழ்விலோ, ஆட்சிப் பொறுப்புகளிலோ எவ்வகையான குந்தகமும் கிடையாது. இதே நிலையில் இருந்த அக்பர், அசோகன் முதலிய அரசர்கள், கல்வி வல்லார்களின் உதவியாலேயே காரியம் ஆற்றினர். ஆனால், ஹைதர் பள்ளிக் கல்வியில்லாதவனாயிருந்தாலும், ,அறிவாற்றலிலும் பெரும் புலவர்களையும் விஞ்சியவனாயிருந்தான்.