பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

விளங்கினான். அவன் கால மன்னர்கள் மட்டுமன்றிப் பல நாட்டின் அறிவுத் துறை வல்லுநர்களும், அவன் இயற்கையறிவாற்றல் கண்டு திகைத்துப் போயினர். ஆங்கிலேயர்களே அதற்குப் பல சான்று கூறுகின்றனர்.

ஹைதர், தன் வாழ்வில், ஒரு மணி நேரத்தைக் கூட வீணாக்கியதில்லை. உழைப்பும், சுறுசுறுப்பும், விடா முயற்சியும் அவனிடம் உச்ச நிலையில் இருந்தன. இதன் பயனாகவே, வாழ்நாள் முழுவதும் ஓயாத போராட்டத்திலீடுபட்டிருந்தும், அவன் அதன் இடைவேளையிலேயே, நாட்டாட்சியின் ஒவ்வொரு செயலையும், தன் குடும்பத்தின் நிர்வாக முழுவதையும் தானே, நேரிடையாகக் கவனித்துத் திட்டம் செய்ய முடிந்தது. அவன் கண் கூடாக நேரிலிருந்து, பார்த்துச் செய்யாத செயல் எதுவும் கிடையாது. அத்துடன், எந்தக் காரியத்தையும் நீள நினைந்து, வழுவறத் திட்டமிட்டல்லாமலும் அவன் செய்ததில்லை. உணர்ச்சி, விருப்பு, வெறுப்பு, கோபம் எதுவும் அச்செயல்களில் இடம் பெறவில்லை.

அவன் தனக்கு உண்மையானவர்களுக்கு, தனக்காக உயிரைப் பாராமல் உழைத்தவர்களுக்குத் தாராளமாக வாரி வழங்கினான். போர்க் களத்துக்குப் படைகளை அனுப்பி விட்டு, அவன் தலைவனாக ஒதுங்கியிருக்கவில்லை. பிள்ளையைக் களத்திற்கு அனுப்பி விட்டு, அவனையே நினைந்து, நினைந்து செயலாற்றும் தாய் போல, அவன் அவர்களுக்கு நினைந்து, நினைந்து ஆதரவுகளும், துணையும் செய்தான். நாள் தவறாமல், படை வீரர்களுக்கு மருத்துவ உதவி, பணம், உணவுப் பொருள்கள் அனுப்பி, அவர்கள் நலம் உசாவி வந்தான். இறந்தவர் குடும்பங்களை, அவன் தன் குடும்பமாகப் பேணினான். காயமுற்றவர்களை, அரசாங்கச் செலவில் குணப்படுத்தி, ஓய்வுடனே சம்பளமும், குடும்ப மானியமும் அளித்தான். படை த் துறைகளிலும், பணித் துறைகளிலும் அனுபவ மிக்கவர்-