பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்

111

யாளர் எழுப்பிய கேள்விகளுக்கு, அவன் தந்த விடை விளக்கங்கள் இயேசு பிரான் விளக்கங்களின் அருகே வைக்கத் தக்க சிறப்புடையவை ஆகும்.

ஒரு நாள் வாய்ச் சண்டையிலிருந்து கைச்சண்டைக்கு முதிர்ந்து விட்ட, ஒரு சமயப் பூசல் ஹைதரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம்களிடையேயுள்ள ஷியா, ஸுனீ வகுப்பினரிடையே நிகழ்ந்த வாதம் அது. முகமது நபிக்குப் பின் சமயத் தலைமை தாங்கிய குரவர்களில் ஷியாக்கள் சிலரைப் பூசித்தனர். சிலரைக் குறை கூறினர். குறை கூறப்பட்டவர்களே ஸுனீகளால் பூசிக்கப்பட்டவர்களாததால்,. சண்டை வளர்ந்தது. ஹைதர், இரு தரப்பாரையும் அழைத்து, அவரவர் வாதங்களைக் கேட்டான்.

“அரசே! நம் சமயக் குரவரைப்பற்றி, இந்த ஷியாத் தலைவர்கள் தூற்றுகின்றனர். அதை எங்ஙனம் பொறுப்போம்?” என்றனர் ஸுனீத் தலைவர்கள்.

“அரசே! சமயக் குரவர் என்று அவர்கள் போற்றுபவர்கள், இன்னின்ன தீமையைச் செய்தார்கள் என்று காட்டித்தானே குறை கூறுகிறோம். தீமை செய்யவில்லை என்று அவர்கள் கூற முடியவில்லை- குறை கூறுவதை மட்டும் எதிர்ப்பானேன்?” என்றனர் ஷியாக்கள்.

ஹைதர் தீர்ப்பளித்தான், அது ஒரு தரப்பாரையே கண்டித்தாலும், சமயக் கிளையினரிடையே ஒரு தலைச் சார்பாயில்லை. ஷியாக்களைப் பார்த்து அவன், “அன்பரீர், நீங்கள் குறிப்பிட்ட குரவர்கள் இப்போது வாழ்பவர்களா?” என்று கேட்டான்.

“இல்லை” என்றனர் அவர்கள்.

மன்னன் உடனே சினத்துடன் பேசினான்: “ஆளில்லாத போது புறங் கூறுவது தவறு. மாண்டவரைக்