மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்
115
முந்நூறும் தாண்டிக் கொண்டு சென்று, எதிர்பாராமல் மின்னலெனப் பாய்ந்து, இடியென மோதி விடும் திறமுடையவனாயிருந்தான். ஆங்கிலேயரைப் போரில் திணறடித்த பண்பும், 1779-ல் சென்னை நகரைக் கலக்கிய திறமும் இதுவே.
வீரனாகவும், தலைவனாகவும் பிறந்தவன் ஹைதர். பழங்கால வாட்போரிலும், புதிய காலத் துப்பாக்கிப் போரிலும் ஒருங்கே, அவன் அக் காலத்தின் ஒப்புயர்வற்ற கை காரனாயிருந்தான்.
ஹைதர், ஒற்றர், வேவுகாரர், தகவல் சேகரத்தார்கள் ஆகியவர்களைத் திறம்பட இயக்கினான். அவன் அமைத்த தகவல் சேகரக்காரர் அமைப்பே, பின்னாட்களில் பத்திரிகை அமைப்பு ஏற்பட வழி கோலிற்று. ஒற்றற் படைத் தலைவன் என்ற முறையில்தான் அவன், மற்ற அரசர்களை விட, மிகுதியாகக் காலம், இடம், சூழல்களை நன்றாக உணரத் தக்கவன் ஆனான். இதுவே அவனைத் தென்னாட்டின் தேசிய வீரனாக்கிற்று.
ஹைதரின் குறைபாடுகளில் ஒன்று, அவன் முன் கோபமே. இது பற்றிய ஒரு சுவைகரமான செய்தி கூறப் படுகிறது. தம்பட்டசாலைத் தலைவன் அல்லது தாரோதா, செப்பு நாணயத்தின் மீது என்ன உருவம் பொறிப்பது என்று கேட்க வந்தான். ஏதோ சச்சரவிலீடுபட்டிருந்த ஹைதர், “போ, ஏதேனும் ஒழுக்கங் கெட்ட சித்திரம் பார்த்து பொறித்து வை” என்றான். அப்பாவி தாரோதா சொன்னபடியே ஒரு படம் உருவாக்கித் தம்பட்டமடித்தான். நாலைந்தாயிரம் நாணயம் அடிக்கப்பட்ட பின்னரே, சில பெரியோர்கள் ஹைதரிடம் வந்து அது பற்றி முறையிட்டார்கள். அதன் மீது வெளியிடப்பட்ட நாணயங்கள் திரும்பியழைக்கப்பட்டு, உருக்கப்பட்டனவாம்!