பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

தன என்று எண்ண இடமுண்டு. சங்க காலத்தில், தமிழகத்திலே சேர சோழ பாண்டியர் என்ற முத்தமிழ் முடிமன்னர் ஆண்டனர். ஆனால், தமிழகம் நீங்கலாக எப்பகுதியிலும், அந்நாளில் மொழி எல்லை வகுப்போ, மொழி சார்ந்த அரசுகளோ ஏற்படவில்லை. குடி மரபுகளே நிலவின. தமிழகத்திலே கூட, முடியரசுகள் ஏற்பட்ட பின்பும், அவர்களுக்கு அடங்கியும், அடங்காமலும் பல குடி மரபுகள் நிலவின. தமிழகத்துக்கு அப்பால் முடியரசுகள் இல்லை; குடியரசுகளே நிலவின. தமிழகத்திலும், தமிழகத்துக்கு அப்பாலும் இக்குடி மன்னர்கள் வேளிர் அல்லது சளுக்கர்கள் எனப்பட்டனர்.

வட தொண்டை நாட்டில், இன்றையத் தெலுங்கு நாட்டுப் பகுதியில் ஆய் அண்டிரனும், திரையரும் வேளிராக ஆண்டனர். அண்டிரர் குடியே ஆந்திர மரபாய் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை பேரரசாக நிலவிற்று. கலிங்கரும் இத்தகையக் குடியரசரே. சில காலம், கலிங்கரும் சில காலம், ஆந்திரருமாக இமய முதல் வடபெண்ணை வரைப் பேரரசாட்சி நடத்தினர். சங்க காலத் திரையர் குடி மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின், பல்லவப் பேரரசு நிறுவி, இன்றைய ஆந்திர, வட தமிழகப் பகுதி முழுதும் ஆண்டது. இதே சமயம், மேல்திசையில் கடம்பர் குடியரசு மரபினராக ஆண்டனர். கலிங்கர், ஆந்திரர், பல்லவர் அல்லது திரையர், கடம்பர் ஆகிய இவ்வெல்லா மரபுகளும், கடலோடிகளாக விளங்கி, கடல் வாணிகம் நடத்தினர். அயல்நாடுகளில், சிறப்பாகத் தென் கிழக்காசியாவெங்கும் இவர்கள் தென்னக நாகரிகம் பரப்பி, தென்னகக் குடியேற்றங்கள் நிறுவினர்.

இக்காலத்தில் மைசூர்ப் பகுதியில், எருமை அல்லது எருமையூரன் என்ற வேளும், தென் கன்னடப் பகுதியில்