பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலமும் களனும்

9

நன்னன் என்ற வேளும் ஆண்டனர். இவர்கள் பெயர்கள் இன்றளவும் நம்மிடையே நிலவுகின்றன. எருமையூர் என்பதன் சமஸ்கிருத வடிவம் மஹிஷபுரி என்பது. அதன் பாளி அல்லது பாகத (பிராகிருத) வடிவமே இன்று மைசூர் என்ற பெயரைத் தந்துள்ளது. அது முதலில் ‘மைசூர்’ என்ற ஊர்ப் பெயராய் இருந்தது. ஹைதர் காலத்திலிருந்து, அது அவ்வூரைத் தலைநகராகக் கொண்ட பரப்பின் பெயராய் இயங்குகின்றது.

மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின், பாண்டியர் சோழர் குடிகளைச் சேர்ந்த இளவல்கள் பலர், தென் தெலுங்கு நாட்டிலும், மேற்கு மைசூர்ப் பகுதியிலும் பல தனியரசுகள் நிறுவினர். தெலுங்கு கன்னட மொழிகளில் ‘சோழ’ என்ற சொல் ‘சோட’ என்று திரிந்தது. நன்னன் என்ற பெயருடன், சோட என்ற பெயரும் இணைந்து, இன்று வரை ‘நன்னிசோட’ என்ற குடிப் பெயராய் அப்பகுதிகளில் நிலவுகிறது.

கி.பி.3 முதல் 10-ம் நூற்றாண்டு வரை, தமிழகத்தின் பெரும் பகுதியைப் பாண்டியர் ஆண்டனர். வட தமிழகத்தையும், ஆந்திரப் பகுதியையும் பல்லவர் ஆட்சி கொண்டனர். இதே சமயம், தென்னாட்டின் வடபகுதியை ஆண்டவர்கள் கடம்பர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர் ஆகிய மரபினர்.அவர்களுக்குக் கீழ்ப்பட்டும், கீழ்ப்படாமலும் கங்கர் (மேலைக் கங்கர்) என்ற மரபினர் மைசூர்ப் பகுதியை ஆண்டு வந்தார்கள். கங்கரும், அவருக்குப் பின் வந்த மரபினரும் சமண சமயம் சார்ந்தவர்கள். ஹளபீடு, பேலூர் ஆகிய இடங்கள், இன்றும் அவர்கள் கலை வளத்துக்குச் சின்னங்களாய் அமைகின்றன. ஹம்பியிலுள்ள விஜய நகரச் சிற்பங்களுடன் போட்டியிட்டு, இவை கன்னட நாட்டின் கலைச் செல்வங்களாகப் புகழ் பெற்றுள்ளன.