பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

12-ம் நூற்றாண்டில், மைசூர்ப் பகுதி சோழப் பேரரசர் ஆட்சிக்கும், அதன் பின், பாண்டியப் பேரரசர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்தது. ஆனால், அப்பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின், 14-ம் நூற்றாண்டு வரை ஹொய்சளர் என்ற வலிமை வாய்ந்த மரபினர், துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு அப்பகுதியில் ஆண்டு வந்தனர்.

14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், முதன் முதலாக, தென்னகத்தின் அரசியல் வாழ்வில், வட திசையிலிருந்து ஒரு பேரிடி வந்து விழுந்தது. சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், தென்னாட்டுக்கப்பாலுள்ள சிந்து கங்கைவெளி ஆப்கானிய மரபின் ஆட்சிக்கு உட்பட்டது. டில்லியில் ஆண்ட ஆப்கானியப் பேரரசன் அலாவுதீன் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக் காபூர் 1310-ல் தென்னாட்டின் மீது படையெடுத்தான்.

மைசூர்ப் பகுதிக்கு வடக்கே, தேவகிரியில் யாதவ மரபினரும், வாரங்கலில் காகதீயரும் ஆட்சி செய்து வந்தனர். மாலிக் காபூர் படையெடுப்பின் முன் இவர்களும், ஹொய்சளரும் வீழ்ச்சியுற்றனர். மாலிக் காபூர் தமிழகத்திலும், பாண்டியப் பேரரசை நிலை குலையச் செய்து, இராமேசுவரம் வரை கொள்ளையடித்துச் சென்றான்.

மாலிக் காபூர் படையெடுப்பின் அழிவிலிருந்து, முதல் முதல் தலை தூக்கிய இடம் மைசூர்ப் பகுதியே. இங்கே விஜயநகரப் பேரரசு உருவாகி, 16-ம் நூற்றாண்டு வரை கன்னடம், தெலுங்கு நாடு, தமிழகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கி ஆண்டது. இதன் வடபால் பகமளி என்ற மற்றொரு இஸ்லாமியப் பேரரசு தோன்றி வளர்ந்தது. இப்பேரரசு விரைவில், பீஜப்பூர், கோல்கொண்டா, அகமது நகர், பீஹார், பீடார் ஆகிய ஐந்து தனியரசுகளாகச்