20
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
அவர்களில் இளையாள் மூலம், அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். இரண்டாவது புதல்வன், இளமையிலேயே காலமானான். ஷாபாஸ் கான், ஹைதர் அலி கான் என்ற மற்ற இரு புதல்வர்களுமே அவன் குடி மரபின் புகழ்ச் சின்னங்களாக நிலவினர். ஷாபாஸ் 1718-லும், ஹைதர் 1721-லும் பிறந்தனர். இளையவராகிய ஹைதரே பின்னாளில், கன்னடத்தின் போர் வாளாகப் புகழ் பெற்ற சிங்கக் குருளை ஆவார்.
ஃவத்தே முகம்மது அந்நாளைய தன்னல, தன்னாதிக்கப் பூசல்களிடையே தன் தலைவனாகிய, தர்கா கலி கானுக்கும், அவன் பின்னோர்களுக்கும், உண்மை தவறாமல் உழைத்து வந்தான். ஆயினும், உடனிருந்தோர் தவறுகளால், அவன் தோல்வியுற்றுப் போரில் மாள நேர்ந்தது. தர்கா கலி கானின் புதல்வனாகிய அப்பாஸ் கலி கான் நன்றி கெட்ட தனமாக, அவன் செல்வ முழுவதையும் பறிமுதல் செய்து எடுத்துக் கொண்டான். அத்துடன் நில்லாமல், அக்கொடியோன், பணப் பேராசையால், ஃவத்தேயின் மனைவி, மக்கள் அணிமணி, ஆடைகளையும் பறித்துக் கொண்டு, அவர்களைச் சிறையிலிட்டுக் கொடுமைக்கு ஆளாக்கினான். எட்டு வயதான ஷாபாஸும், மூன்றே வயதுடைய ஹைதரும் ஒரு பெரிய முரசத்தினுள் வைத்து, அதிர்ச்சியில் துடிதுடித்து வீறிடும்படி, முரசறைவிக்கப் பெற்றனராம்!
மைசூரில் வாழ்ந்த மூத்த ஹைதர் சாகிப், தன் சிற்றன்னையரும், தம்பியரும் படும் அவதி கேட்டு, அவர்களைச் சென்று விடுவித்தான். அவர்களைத் தன் பாதுகாப்பிலேயே வைத்து, அவன் வளர்த்தான். ஷாபாஸுக்கு வயது வந்ததும், அவன் தன்னுடன், அவனையும் படைத்துறை அலுவலில் சேர்த்துக் கொண்டான்.