பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

நுட்பத் துறையிலும், அன்று தென்னகம் உலகத்தில் தலைமை பூண்டு, உலகத்தையே ஆட்டிப் படைத்து வந்தது. அத் தொழில் வளத்தை அழிக்கவும், அதைத் தன் கைவசமாக்கித் தொழில் நாடாக வளரவும், ஆங்கில ஆட்சி இங்கிலாந்துக்கு உதவிற்று.

பிரஞ்சு ஆட்சி ஏற்பட்டிருந்தால், தென்னாடு விடுதலை இழந்து, தளைப்பட்டிருக்கும். ஆனால், அது தங்கத் தளையாகவே இருந்திருக்கும். விடுதலை இழப்பு நீங்கலாக, வேறு எந்தப் பொல்லாப்புக்கும் அது ஆளாகியிருக்காது. நேர் மாறாக, ஆங்கில ஆட்சியின் முழுத் தீங்கு, அது அயல் ஆட்சி என்பது மட்டுமல்ல; அது அரசியல் விடுதலை வாழ்வை மட்டுமின்றி, தென்னகத்தின் பொருளியல் வாழ்வையும், கலை வாழ்வின் பெருமையையும் அழித்தது என்பதே. 18-ம் நூற்றாண்டு வரை, உலகில் இத்துறைகளில் போட்டியற்று, முதன்மை நிலை அடைந்திருந்த தென்னாடு, 19, 20-ம் நூற்றாண்டுகளுக்குள் உலகில் மட்டுமல்ல; கீழ்த் திசையில் கூடக் கடைப்பட்ட நாடாயிற்று. அதன் முதன்மை நிலை, தடம் இல்லாது அழித்தொழிக்கப்பட்டது.

ஹைதரின் பெருமை, அவன் விடுதலை வாழ்வு சரியாமல் காக்க முயன்றான் என்பது மட்டுமல்ல; விடுதலை சரிவுறும் காலத்திலேயே, புதிய விடுதலைக்கு அடி கோலினான் என்பது மட்டுமல்ல ; அவன் முழுப் பெருமை, இவை கடந்த ஒன்று. அவன் தென்னகத்தின் பொருளியல் சரிவு கண்டு, அதைத் தடுக்க அரும்பாடுபட்டான் என்பதே.

ஹைதர் அரசியல் வாழ்வில் நுழைவதற்கு முன்பே, நிஜாமும், ஆர்க்காட்டு நவாபும் விடுதலை வாழ்வின் சரிவு நோக்கிச் சறுக்கத் தொடங்கி விட்டனர்.

நிஜாம் அரசை முதல் முதல் நிறுவியவன் மீர் கமருத்தீன் என்பவன். அவன் தந்தை மொகலாயப்