பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னக அரசியல் அமளி

25

பேரரசின் கீழ், கூர்ச்சரத்தின் மண்டலத் தலைவனாயிருந்தவன். அவன் பாட்டன் ஆஜ்மீர் மண்டலத் தலைவனாயிருந்தவன். ஆனால், அவுரங்கசீப்பின் ஆட்சியின் பின், மொகலாயப் பேரரசு சரியத் தொடங்கிய போது, அவன் தென்னகத்தில் தனியாட்சி நிறுவி, 1713 முதல் 1748 வரை நிஜாம் உல்முல்க் என்ற பட்டப் பெயருடன், தென்னக முழுவதும் மேலாட்சி நிறுவினான்.

அவனுக்குப் பின், அவன் இரண்டாம் புதல்வனான நாஸிர் ஜங்கும், மகள் பிள்ளையான முசபர் ஜங்கும், நிஜாம் அரசுரிமைக்குப் போட்டியிட்டனர். தென்னாட்டின் விடுதலை வீழ்ச்சிக்கு, இந்நிகழ்ச்சியே வித்திட்டது.

நிஜாமைப் போலவே, ஆர்க்காட்டில் தனியாட்சி நிறுவி, 1710.முதல் 1732 வரை சாதத்துல்லா கான் நவாபாக ஆட்சி செய்தான். அடுத்து வந்த நவாப் தோஸ்த் அலிகான் மைசூர் மீது படையெடுத்து, அப்போது மைசூரை ஆண்ட சிக்க கிருஷ்ண ராஜனின் படைகளால் முறியடிக்கப் பெற்றான். அவனுக்குப் பின், ஆட்சி பல கைகள் மாறி வலுவிழந்தது. ஆனால், நிஜாமின் ஆதரவு பெற்று, அன்வருதீன் 1743 முதல் 1748 வரை நல்லாட்சி நடத்தினான். அதன் பின், இங்கும் அரசுரிமைப் போட்டி எழுந்தது. அன்வருதீன் மகனான வாலாஜா—சுராஜ் உத் தெளலா—முகமதலி ஒரு புறமும், தோஸ்த் அலி கானின் மருமகனான சந்தா சாகிப் மற்றொரு புறமும் போட்டியிட்டனர். முகமதலியை நாஸிர் ஜங்கும், சந்தா சாகிபை முசபர் ஐங்கும், பிரஞ்சுக்காரரும் ஆதரித்தனர்.

போரின் முதல் கட்டத்தில், நாஸிர் ஜங்கின் கை மேலோங்கிற்று. கமருத்தீன் இறந்த சமயம், நாஸிர் ஜங் அருகிலிருந்ததால், அவன் அரசிருக்கையை எளிதில் காப்பாற்ற முடிந்தது. மைசூர் மன்னரும், மற்றும் குறுநில