பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

அரசரும் அவனை ஆதரித்தனர். பிரஞ்சுப் படையில், அப்போது உட்கிளர்ச்சி இருந்து வந்ததனால், முஸபர் ஜங் புதுச்சேரிக்கு ஓட நேர்ந்தது.

புதிய நிஜாமான நாஸிர் ஜங்கின் ஆணைக்கு இணங்கியே, மைசூர் அரசன் போரில் இறங்கினான். அரசன் சிக்க கிருஷ்ணராஜன் திறமையற்றவனா யிருந்ததால், அமைச்சன் நஞ்சி ராஜனே இது போது, அரசியலை நடாத்தி வந்தான். அவன் முஸபர் ஜங்கின் ஆட்கள் வசமிருந்த தேவனஹள்ளிக் கோட்டையை முற்றுகை செய்தான். மூத்த ஹைதர் சாகிபு வீரப் போர் செய்து மடிந்ததும், ஹைதரும், ஷாபாஸும் திறமையாகப் படை நடத்தி, மூத்த ஹைதரின் இடத்தில் ஷாபாஸ் அமர்வு பெற்றதும், இம்முற்றுகையிலேதான். ஹைதர் தன் கன்னிப் போர் ஆற்றிப் புகழும் ஆதரவும் பெற்றதும் இங்கேயே.

மைசூர்ப் படைகளின் அடுத்த நிகழ்ச்சி ஆர்க்காட்டு முற்றுகையே. நாஸிர் ஜங், முகமதலியை நவாபாக்குவிக்கும் முயற்சியில் தன் படைகளுடன் இதில் ஈடுபட்டான். ஷாபாஸும், ஹைதரும் மைசூர்ப் படைகளை இங்கே நடத்தினார்கள். முற்றுகை வெற்றியடைந்தது. முகமதலி, நவாபாக்கப்பட்டான். நாஸிர் ஜங், வெற்றிப் புகழுடன் அங்கேயே தங்கியிருந்தான். மைசூர்ப் படைகள், இங்கே வீர தீரத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நின்று போரிட்டது கண்டு, ஆங்கில வரலாற்றாசிரியர்கள் கூட வியப்படைந்துள்ளனர். இதில் புத்தம் புதிய வீரன் ஹைதரின் கை வரிசையே முனைப்பாயிருந்தது என்பது பின்னாட்களிலேயே அவர்களுக்குத் தெரிய வந்தது ஆனால், மைசூர் அமைச்சன் நஞ்சி ராஜன் இவ்வீர இள ஞாயிற்றின் பெருமையை, முற்றிலும் உணர்ந்து கொண்டான். அவனுக்கு மானியம் அளித்து, நிலவரியை நேரிடையாகப் பிரிக்கும் உரிமையும்