பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

சூழ்ச்சி நடவடிக்கை ஒன்றிலன்றி, ஆங்கிலேயர் எதிர்ப்புக்கு பிரஞ்சுத் தளபதிகள் சளைத்ததில்லை. ஆனால் அத்தகையோர், இப்போது ஹைதரின் தாக்குதலுக்கு மீண்டும், மீண்டும் உடைந்தனர். சிறப்பாக ஹைதரின் குதிரைப் படையின் ஆற்றல், தென்னகம் முன்பு காணாத ஒன்றாயிருந்தது. காசீ கான் பேடேயின் தலைமையில், அது இரவும், பகலும் எதிரிகளைத் தாக்கிச் சீர் குலைத்தது. எதிரிகளின் துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் கைக் கொண்டு, அப்படை எதிரிகளின் வலுவைத் தன் வலுவாக்கி வந்தது.

சந்தா சாகிப், மதுரை நாயக மரபின் கடைசி இளவரசியை ஆசை வார்த்தைகளால் நம்ப வைத்து, ஏமாற்றியவன். தென்னக வாழ்வில் ஹைதர் எவ்வளவு தூய வீரனோ, அதே அளவு பழிக்கஞ்சாத் தூர்த்தன் அவன். அவன் வாழ்வின் போக்குக்கு ஏற்ப, அவன் கை தாழத் தொடங்கியதுமே, அவன் உட்பகைவர்கள் கையாலேயே அவன் கோர மரணம் அடைந்தான்.

சந்தா சாகிப் கொடியவனானால், அவனை எதிர்த்த முகமதலி, குடில நயவஞ்சகச் செயல்களில், அவனை விடக் குறைந்தவனல்ல. நைப்பாசை தூண்டிப் பெரும் படையழிவுக்கும், செலவுக்கும் நஞ்சி ராஜனை ஆளாக்கிப் பயன் பெற்ற பின், அவன், தான் முன்பு சொன்ன சொற்படி, மைசூராருக்குத் திருச்சிராப்பள்ளியைத் தர மறுத்தான். அத்துடன், மைசூர் அமைச்சன் பிரஞ்சுக்காரருடன் ஊடாடியதாகக் கூறி, ஆங்கிலேயர்களையும், அவர்களிடமிருந்து பிரித்து, ஆங்கிலேயர்களைத் தன் மனம் போல், கைப் பாவையாக வைத்து ஆட்டிப் படைக்கலானான்.

நஞ்சி ராஜன் பெருஞ் சீற்றங் கொண்டு, ஹைதரை அனுப்பித் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டான்.