பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

என்றே மதித்திருந்தனர். ஆகவே, பெரும்பாலான தலைவர்கள் அட்டி கூறாமல், தம்மாலியன்ற தொகைகளை அவன் முன் கொண்டு வந்து குவித்தனர். தராதவர்களும், அவன் தாக்குதல் முரசம் காதில் விழுந்தவுடனே பணிந்து, ஒற்றைக்கு இரட்டையாகப் பரிசில்கள் கொண்டு வந்து கொட்டி அளந்தனர்.

ஹைதர் மூலம் நஞ்சி ராஜன் அடைந்த புகழும், பணமும் மைசூரில் மன்னன் சீற்றம் தணித்தன. நஞ்சி ராஜன் அனுப்பிய பெருந் தொகையாகிய ஒரு கோடி வெள்ளியை ஏற்று, மன்னன் அவனை மீட்டும் அரசவைக்கு வரவழைத்துக் கொண்டான். ஹைதரும் உடன் சென்று, அமைச்சருடன் அமைச்சராக, மதிப்புடன் பணியாற்றினான்.

நாஸிர் ஜங்கைக் கொலை செய்யத் தூண்டிய கடப்பை, கர்நூல் தலைவர்கள், மேற்கு மைசூர்ப் பகுதியில் குடி மக்களையும், தலைவர்களையும் கிளர்ச்சிக்குத் தூண்டினர். தானைத் தலைவன் கங்காராம் கிளர்ச்சிக்குத் தலைவனாயிருந்தான். ஹைதர் அத்திசையில் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டான்.

தன் படைகளுடனே, ஹைதர் இரவு, பகலாக விரைந்து சென்றான். எதிர்பாராத வகையில், கங்காராம் ஹைதர் படையின் திடீர்த் தாக்குதலுக்கு ஆளானான். கிளர்ச்சிக்காரர் பெரும்பாலோரும் ‘தப்பினோம், பிழைத்தோம்’ என்று ஓடினர். ஹைதர், ஓடியவர்களை விடாது துரத்தி, வாளுக்கிரையாக்கினான், அல்லது உயிருடன் சிறைப் பிடித்தான். கங்காராம் பாரிய சங்கிலியைச் சுமந்து இழுத்த வண்ணம், மன்னர் முன் கொண்டு வரப்பட்டான்.

மைசூரில் ஹைதர் அடைந்து வந்த பெருமையும், அதனால் நஞ்சி ராஜனுக்கு இருந்து வந்த மதிப்பும், அரண்மனையில் பலர் உள்ளத்தில் தீராப் பொறாமை ஊட்டி-