பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

ருந்தனர். நஞ்சி ராஜன் பின்னணி வேவுத் தளங்களில் சுற்றிக் கொண்டிருந்தான். ஹைதர், முன்னணிப் போர் முனையில் ஈடுபட்டிருந்தான். இச்சமயம் பார்த்து, அரண்மனை எதிரிகள் மன்னனை ஏவி, நஞ்சி ராஜனைப் படைத் துறையிலிருந்து வரவழைத்தனர். நஞ்சி ராஜன் தொடர்ச்சியாகப் போர் வேலைகளில் ஈடுபட்டுச் சோர்வுற்றிருந்தான். ஆகவே, விரைவில் போர் முடித்து, மைசூருக்கே மீளும்படி ஹைதருக்கு உத்தரவு அனுப்பி விட்டு, அவன்அரண்மனைக்கு வந்தான்.

இத்தடவை எதிரிகளின் சூழ்ச்சிகள் பேரளவில் பயன் தந்தன. ஹைதரிடம் காரியத் துணைவனாகக் குந்தி ராவ் என்ற ஒருவன் இருந்தான். அவன் சூழ்ச்சிகளில் வல்லவன். நஞ்சி ராஜனிடமிருந்து அமைச்சர் பணியைக் கைக் கொள்ள வேண்டுமென்று அவன் நீண்ட நாள் திட்டமிட்டிருந்தான். ஆகவே, ஒரு புறம், மன்னன் மனத்தை, அவன் நஞ்சி ராஜனுக்கு எதிராகக் கலைத்தான். மற்றொரு புறம், ஹைதரிடமும் நஞ்சி ராஜனைப் பற்றிக் குறைகள் கூறி வந்தான். ஆகவே, நஞ்சி ராஜன் திரும்பி வந்த சமயம், மன்னன் அவன் மீது பழைய குற்றச்சாட்டுகளை நீட்டினான். நஞ்சி ராஜன் எதிர்த்துப் போரிட எண்ணவில்லை. அரசியல் பணிகளிலிருந்து ஒதுங்கி விடுவதாகப் பணிவுடன் கூறினான்.

ஹைதர் திரும்பி வந்த போது, குந்தி ராவே அமைச்சர் பணியை ஆற்றி வந்தான். நஞ்சி ராஜன் பெயரளவிலே, அமைச்சனாக ஒதுங்கியிருந்தான். தன் செயல் துணைவனே, அமைச்சனாவதைப் பெருந்தன்மை மிக்க ஹைதரின் உள்ளம் மகிழ்வுடன் வரவேற்றது. ஆனால், குந்தி ராவுக்கு இது போதவில்லை. அவன் அமைச்சர் உரிமைகளையே முழுவதும் பெற விரும்பினான். ஆகவே, நஞ்சி ராஜனுக்கெதிராக அவன் மன்னன் மனத்தை மட்டுமன்றி, ஹைதர் மனத்தையும்,