பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

வசூலிப்பதில் - இம்மியும் பிசகாமல் கணக்கு வைத்துக் கொள்வதில், குந்தி ராவுக்கு ஈடு யாரும் இல்லை. இதைக் கண்டே, ஹைதர் அவனுக்குப் படிப் படியாக உயர்வு தந்து, இறுதியில் அவனைத் தன் நம்பகமான அந்தரங்கச் செயலாளனாக்கிக் கொண்டான். ஆனால், இந்நிலை அடைந்த பின், ஒப்பற்ற ஆட்சிக் கருவியான அவன், அத்துடன் அமையாமல், ஆட்சியையே கைப்பற்றும் பேரார்வம் கொண்டான். பெருந்தன்மை மிக்க ஹைதர், இங்கும் அவனுக்கு உதவினான். அந்நிலையிலும் அவனுக்கு உண்மையுடனிருந்து, தன்னிலும் அவனை உயர்த்தி, ஆதரவு தர முனைந்தான். ஆனால், ‘ஆட்சிக் கருவி’ ஆளும் பீடத்தில் அமர்ந்த பின், ஆளத் தெரியாதவன் ஆகத் தலைப்பட்டான்.

ஹைதரின் வலிமை அவனுக்குத் தெரியும். ஆனால், ஹைதரின் குறைபாட்டையும் அவன் உள்ளங் கை நெல்லிக் கனி போலக் கண்டான். ஹைதரை எதிர்த்து வெல்லுவது அருமை. ஆனால், சூழ்ச்சியால் அவனை வீழ்த்துவது எளிது. எனவே, குந்தி ராவ் வெளித் தோற்றத்தில் நண்பனாகவே நடித்தான். உள்ளூர, மன்னனை ஹைதருக்கெதிராகத் திருப்பி வந்தான். மன்னனுக்கு அவன் மீது பொறாமை ஏற்படும்படி செய்தான்.

“மன்னரே, தாங்கள் ஆளும் மரபில் பிறந்தவர்கள். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இயற்கைப் படியில், தாம் அரசர் மரபினர். நானோ அமைச்சர் மரபினன். அப்படியிருக்க, பிறப்பால் நீசன், சமயத்தால் வேறுபட்ட முசல்மான், நம் மைசூர் அரசுக்கு வெளியேயிருந்து வந்த ஒரு முரடன்—இப்படிப்பட்டவன், நம் நாட்டில்—நம் ஆட்சிக் கயிற்றில் கை வைப்பதா? இதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? மானமுடைய மன்னர் மரபுக்கு, மாளாத நம் வைதிக நலனுக்கு இது இழுக்கல்லவா?” என்று