பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிலன் வீழ்ச்சி

49

சிறுத்தையும், யானையின் சீற்றத்துக்கு ஆளாகிச் சீரழிந்தது போல, குந்தி ராவுடன் சேர்ந்த பழிக்கு ஆளாகி, ஈஸாஜி பண்டிட் பல தொல்லைகளை அடைய வேண்டி வந்தது. இந்நிலையில், நஞ்சி ராஜன் அவனுக்கு ஒரு முடங்கல் வரைந்தான். “மராட்டியப் பேரரசில் பெறும் பொறுப்பு வகிப்பவர் தாங்கள். குந்தி ராவோ ஒரு சிற்றரசின் எல்லையில் அடாது செய்து, உட்பகை வளர்ப்பவன். இத்தகையவனுடன் சேர்ந்து, செயலாற்றுவது தங்கள் பெருமரபுக்கு இழுக்காகும் என்று கூற வேண்டி வந்ததற்கு வருந்துகிறேன். ஆயினும், தம் ஆய்ந்தமைந்த அறிவமைதிப்படியே நடக்கவும்” என்று அவன் நயம்பட எழுதினான்.

ஏற்கெனவே மனம் புண்பட்டிருந்த ஈஸாஜி ராவ், குந்தி ராவுடனே பூசலிட்டு, அவனிடம் போர்ச் செலவு கோரினான். குந்தி ராவ் மறுக்கவே, மராட்டியத் தலைவன் அவன் படைகளையே கொள்ளையிட்டு, அப்பணத்துடன் திரும்பினான்.

மீர் அலி ரஸா கானின் படைகளும் இச்சமயம் வந்து சேர்ந்தன. அவற்றுடனும், மக்தூம் படைகளுடனும், ஹைதர் குந்தி ராவை வேட்டையாடத் தொடங்கினான். கோட்டை, கோட்டையாக அவன் சென்று புகலிடம் தேடினான். கோட்டையின் பின் கோட்டையாக எல்லாம் நஞ்சி ராவ், ஹைதர் ஆகியவர் வசப்பட்டன.

மைசூரில் ஹைதர் அலி இல்லாததால், அரசன் ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குந்தி ராவின் வீழ்ச்சியை எதிர் பார்த்து, ஒவ்வொருவரும் தாமே அரசராகத் தலைப்பட்டனர். இக்குழப்பத்தில், அரசன் தன் குடும்பத்தையும், செல்வத்தையுமே பாதுகாக்க முடியாமல் பேரவதிக்காளானான். அரசனின் கையெழுத்துடன், அரசன் தாயும், பாட்டியும் ஹைதரை மைசூருக்கு அழைத்தனர்.

4