பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

எண்ணங்கொண்டு மராட்டியர் கைவசமிருந்த மாகாணத்தின் மீது படையெடுத்தான்.

சுரா மாகாணத்தின் தலைநகரான ஹஸ் கோட்டை பங்களூரை அடுத்திருந்தது. அதைக் கைப்பற்றும் முயற்சியில், பஸாலத் ஜங் வெற்றி பெற முடியவில்லை. அவ்வகையில் தனக்கு உதவி செய்தால், மாகாண ஆட்சியை ஹைதரிடமே விட்டு விடுவதாக அவன் தெரிவித்தான். இச்செயல் மூலம், தன் ஆட்சியையும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும். அத்துடன் நிஜாமின் வலுவையும் குறைக்க முடியும் என்று கண்டு, ஹைதர் அதில் முனைந்தான்.

ஹஸ் கோட்டையை ஹைதர் இரண்டு மூன்று நாட்களில் வென்றடக்கினான். அதன் பின், அவன் பெரிய பலாப்பூர் கோட்டையை அணுகினான். ஹைதரும், அவன் தமையனும், சிறு பிள்ளைகளாயிருக்கும் போது, அவர்கள் தாயுடன் சிறையில் அவதிப்பட்டிருந்த கோட்டை இதுவே. அவர்களைத் துன்புறுத்திய அப்பாஸ் அலி கானே அதன் முதல்வனா யிருந்தான். வளர்ந்து விட்ட புலிக் குட்டியின் சீற்றத்துக்கு அஞ்சி, அவன் பெண்டு பிள்ளைகளுடன் கோட்டையை விட்டு ஓடினான்.

மாகாணத்தின் கடைசிக் கோட்டை ஈத்தா என்பது. மராட்டியர், தமிழகக் கொங்கு மண்டலத்தை வெல்லும் பேரவாவுடன் இங்கே பீரங்கிகள், வெடி மருந்துக் குவைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றைப் போதிய அளவு சேமித்து வைத்திருந்தனர். இவை அனைத்தும் ஹைதர் கைவசமாயின. போர் முடிவில், பஸாலத் ஜங் ஒன்றிரண்டு பீரங்கிகள் தவிர மற்றச் செல்வங்களையும், மாகாண ஆட்சியையும் ஹைதரிடமே ஒப்படைத்தான். அத்துடன் அவன் அரிய உதவியைப் பாராட்டி, நவாப் பகாதூர் சக் மக் ஜங் என்ற பட்டத்தையும் அரசுரிமைச்