இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள்
ஹைதர் அலி
1. விடுதலைப் பாறை
முடி சார்ந்த மன்னர், பிடி சாம்பராயினர்! இதுவே மன்னர் மரபின் பொது நீதி. இதற்கு விலக்கான தென்னாட்டு மன்னர் இருவர் உண்டு. ‘பிடிசாம்பர்’ வாழ்க்கைகளை ஒழுங்காய் எழுதிய ‘தாள் வரலாறு’, அவர்கள் புகழ் பொறிப்பதில் தள்ளாடியதுண்டு. ஆனால், மக்கள் உள்ளமாகிய பொன் வரலாற்று ஏட்டில், இருவர் புகழும் நீடித்துள்ளன. புதுப்புது மேனியுடன் இருவர் புகழும் நீடித்து வளர்கின்றன.
தமிழகத்தின் தென் கோடியிலே, பாஞ்சாலங்குறிச்சியருகே ஒரு மண் மேடு காட்சியளிக்கிறது. அது தமிழர் கண்களில் ஒரு வீர காவிய ஏடு. தமிழர் உள்ளங்களில், அது விடுதலைக்குக் கொடி எடுத்த வீரத்தின் காடு. வீரத்தின் எல்லை நோக்கி, விடுதலை ஆர்வம் என்ற கவண்