பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெற்றிப் பாதை

55

சின்னங்களையும் அவனுக்கு அளித்தான். ஹைதர் பட்டத்தில் ‘ஜங்’ என்ற அடைமொழியை மட்டும் நீக்கி, மற்றவற்றைத் தன் நிலவர உடைமையாக்கிக் கொண்டான். மீர் இஸ்மாயில் ஹுசேனை மாகாணத் தலைவனாக்கி விட்டு, ஹைதர் வெற்றியுடன் சீரங்கப்பட்டணத்துக்கு மீண்டான்.

சிறிய பலாப்பூர் வெற்றியை அடுத்து, அதைச் சார்ந்திருந்த ராயதுருக்கம், ஹர்ப்பன ஹள்ளி, சித்தல துருக்கம் ஆகிய கோட்டை முதலியவைகளையும் ஹைதர் தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்து, திறை தருவிக்க முயன்றான். இவ்வேலை கிட்டத்தட்ட முடியும் சமயத்தில், பேடனூர் அரசியலில் ஏற்பட்ட அரசுரிமைப் பூசல் அவன் கவனத்தை ஈர்த்தது.

ஹைதரின் பேரரச வாழ்வுக்கு அடிவாரமிட்ட நிகழ்ச்சி, பேடனூர் வெற்றியேயாகும். பேடனூர் இன்றைய மைசூர்ப் பகுதியின் வடமேற்கிலுள்ள மலை நாட்டுச் சிறு நில அரசு ஆகும். 16-ம் நூற்றாண்டில் கிலாடி என்ற தலைநகரிலிருந்து நாயக மரபு மன்னர் அதை ஆண்டனர். அவர்கள் லிங்காயதர், அதாவது வீர சைவ மரபினர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின், இச்சேரி புதிய தலைநகராயிற்று. இச்சேரி நாயகர்கள், மைசூர் உடையார்களுடன் போட்டியிடத் தக்க வலிமை வாய்ந்த அரசர் ஆயினர். 1640-ல் சிவப்ப நாயகன் என்ற அரசன் தலைநகரைப் பேடனூர் அல்லது ‘மூங்கில் நகர’த்துக்கு மாற்றி, அதை வெல்ல முடியாத கோட்டை ஆக்கினான். அவன் ஆட்சிக் காலத்தில் பேடனூரின் செல்வம் தென்னாடெங்கும் புகழ் பெற்றதாயிற்று. ஆட்சியும் மேல் கடற்கரை வரை பரந்திருந்தது.

1755-ல் பேடனூர் மன்னன் பசவப்ப நாயகன் மாண்டான். அவன் மனைவி வீரம்மா, எக்காரணத்தாலோ, தன் மகன் சென்னபஸவையாவிடம் ஆட்சியைக் கொடுக்-