56
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
காமல் தானே ஆள முற்பட்டாள். சென்ன பஸவையா கொல்லப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் சென்ன பஸவையா தப்பியோடி, ஹைதர் அலியிடம் உதவி கோரினான். அரசுரிமை பெற்றால், ஹைதரின் ஆளாக இருந்து ஆட்சி செய்வதாகவும், திறை செலுத்துவதாகவும் வாக்களித்தான்.
ஹைதரின் பேடனூர்ப் படையெடுப்பு 1763-ல் தொடங்கிற்று. தலைநகரை அணுகும் வரை அரசி ஒரு சிறிதும் கவலை கொள்ளவில்லை. காடு, மலைகளைக் கடந்து, எந்தப் படையும் அவ்விடம் வர முடியாதென்ற துணிச்சலே அதற்குக் காரணம். ஆனால், இளவரசன் உதவியாலும், ஓர் அமைச்சன் உதவியாலும், படைகள் காட்டு வழியறிந்து விரைந்தன. கோட்டையை அணுகிய பின், அரசி பணிந்து சமாளிக்க முயன்றாள். ஆண்டு தோறும், ஒரு இலட்சம் வெள்ளி திறையளிப்பதாக வாக்களித்தாள். ஆனால், அரசுரிமை இழப்பதைத் தவிர, வேறு எந்தத் திட்டத்துக்கும் ஹைதர் இணங்கவில்லை.
ஆளுபவரிடம் எத்தனை வேற்றுமை இருந்தாலும், அந்த மலைநாட்டு மக்களின் போர் உறுதியில் தளர்ச்சி எதுவும் இல்லை. அவர்களைக் கொல்வதுதான் எளிதாயிருந்தது; அடக்குவது எளிதாயில்லை. தலைநகர்க் கோட்டை முற்றுகை ஒரு ஆண்டு நீடித்தது. அதன் பின்னும், மறை சுரங்க வழி ஒன்றை உளவாளிகள் கண்டு கூறியதனாலேயே, கோட்டை வீழ்ச்சியுற்றது. அரண்மனையை தானே தீக்கிரையாக்கி விட்டு, நகை நட்டுக்களுடன் அரசி வேறு கோட்டைகளுக்கு ஓடினாள். ஆனால், இறுதியில் எல்லாக் கோட்டைகளும் பிடிபட்டன. அரசியும், அவள் நண்பர்களும் மதகிரிக் கோட்டையில் சிறை வைக்கப் பட்டனர்.