ஆங்கிலேயருடன் போர்
67
நிஜாம் ஆங்கிலேயரை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ளவில்லை. ஒரு புறம் ஹைதருடனும், இன்னொரு புறம் ஆங்கிலேயருடனும், நேச உறவு கொண்டு, இரண்டகமாகவே நடந்து கொண்டான். வெற்றி எந்தப் பக்கம் வரக் கூடுமோ, அந்தப் பக்கத்தில் சாய எண்ணி, மதில் மேல் பூனையாக இருப்பதையே, அவன் அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்தான்.
நிஜாம் படைகள் ருக்னுதுல்லா என்ற படைத் தலைவன் கீழ் அணி வகுக்கப்பட்டிருந்தன. ஹைதர் படையில், அவன் மகன் திப்பு, மன்னிப்புப் பெற்று ஹைதருடன் சேர்ந்து கொண்ட மீர்அலி ரஸா கான், மக்தூம் சாகிபு, காஸி கான் முதலிய படைத் தலைவர்களும், மைசூர் படை முதல்வனான மகமதலியும் தலைமை வகித்தனர். இருவர் படைகளும் சேர்ந்து, 42,000 குதிரை வீரரும், 28,000 காலாள் வீரரும் இருந்தனர். 109 பீரங்கிகள் அவர்களுக்கு உதவின. தவிர, ஹைதர் வசமாக ஹைபத் ஜங் என்பவன் தலைமையில் 5,000 குதிரை வீரர்களும், 2,000 பயிற்சி பெற்ற காலாள் வீரரும், 2,000 பயிற்சி முற்றுப் பெறாத வீரரும், சில பீரங்கிகளுடன் பின் தங்கி இருந்தனர். இப்படைகள் ஆர்க்காட்டுச் சமவெளிக்குள் பாய்வதற்குச் சித்தமாகச் சங்கம் கணவாய் அருகே கூடாரமடித்து இருந்தன.
நிஜாம்—ஹைதர் படைகள் இணைந்து படையெடுக்கத் தொடங்கிய செய்தி அறிந்ததும், திருச்சிராப்பள்ளியிலிருந்த படைத் தலைவன் ஹோவார்டு 5,000 காலாள் படை வீரரையும் 1,000 வெள்ளையரையும் விரைந்து, கணவாயின் மறு புறம் கொண்டு வந்து நிறுத்தி, நேசப் படைகள் கணவாய் கடவாமல் தடுக்க முயன்றான். ஆனால், ஹைதர் படைகள் இரவோடிரவாகக் கணவாய் கடந்து, ஆங்கிலப் படைகளைச் சூழ்ந்து, அவற்றைத் தாக்கின. நிலைமையைச்