பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயருடன் போர்

69

அமைச்சன் படைத் தலைவனையும், படைத் தலைவன் வீரரையும் குறை கூறிச் சமாளித்தனர். ஆனால், ஆங்கிலேயர், அவர்களுக்குப் பேச்சுக்கும் இடமளிக்காமல் துரத்தினர். ஹைதரின் சிறிய மெய்காவற் படை, இத்தோல்வியிடையேயும் நிலைமையைச் சமாளித்து, பாதுகாப்புடைய வேறிடத்துக்குப் பின் வாங்கிச் சென்றது.

போரில் எடுத்த அடியில், ஆங்கிலேயர் தற்காலிகமாக வென்றாலும், நாட்செல்லச் செல்ல, அவர்கள் பக்கத்திலும் தளர்ச்சி ஏற்பட்டது. ஆர்க்காட்டு நவாபின் படைகள், நிஜாம் படைகளை விட மோசமாயிருந்தன. வேண்டிய நேரத்தில், வேண்டிய இடத்தில் படையும், பண உதவியும் செய்வதாகக் கூறி, அவன் சென்னை அரசியல் தலைவர்களைப் போர் முயற்சியில் ஊக்கியிருந்தான். ஆனால், வரிப் பணத்தைத் தின்றழித்தது தவிர, பணத்துக்கு அவனிடம் வழி ஏதும் இல்லை. திருவண்ணாமலையில், படைகளுக்கு வேண்டிய உணவும், தளவாடமும் சேகரித்து வைத்திருப்பதாக அவன் கூறியிருந்தான். இதை நம்பி, ஸ்மித் அவ்விடம் சென்று காத்திருந்தான். எத்தகைய தளவாடமும் கிட்டவில்லை. ஆனால், இதே நம்பிக்கையுடன் அங்கே வந்திருந்த படைத் தலைவர் ‘உட்’டின் வீரருடன் ஸ்மித் கலக்க முடிந்தது. அவர்கள் மொத்தப் படை பலம் இப்போது 1,030 குதிரை வீரரும், 5,800 காலாட் வீரரும் ஆவர். 16 பீரங்கிகளும் இருந்தன.

திருவண்ணாமலையில், ஆங்கிலேயரை ஹைதர் தாக்கினான். போர்க் களத்தில் ஆங்கிலேயர் எதிர்ப்பைச் சமாளித்து நின்றனர். ஹைதர் படைகள் பின்னடைந்தன. ஆனால், ஆங்கிலேயருக்கு உணவு, தளவாட உதவி எதுவும் வராமல், மைசூர்ப் படைகள் தடுத்தன. அவர்கள் கையில் பட்ட தளவாடங்களால் அவர்கள் நிலை மேன்மேலும் நலமடைந்தது.