பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயருடன் போர்

73

வைத்தான். வேங்கடகிரியிலிருந்து திடீரென்று மேஜர் பிட்ஸ் கெரால்டு என்ற படைத் தலைவன் வந்து உதவியிரா விட்டால், ‘உட்’, தானே ஹைதர் பிடியிலிருந்து தப்பி வந்திருக்க முடியாது !

ஹோசூர்-பாகல்பூர் தோல்வியால், ‘உட்’டும் பதவியிழந்தான். படைத் தலைவன் லாங் படை முதல்வனாக அமர்வு பெற்றான்.

ஆங்கிலேயர் இப்போது பங்களூரைக் கைப்பற்றி, ஹைதரை மீள வைக்கலாம் என்று மனப்பால் குடித்தனர். இதை அறிந்த ஹைதர், பஸ்ஸுல்லாக் கானை அனுப்பி, ஆங்கிலேயரிடம் மீந்திருந்த கோட்டைகளையும் பிடிக்க ஏவினான். இது மிக எளிதாக நிறைவேறிற்று. அத்துடன், ஹைதர் தன் படையுடன் சூறாவளி போலச் சுழன்று திரிந்து, கோயமுத்தூர், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை எல்லாம் நொடிக்குள் கைப்பற்றினான். வழியிலே, நிக்ஸன் என்ற தலைவனுடன், ஒரு ஆங்கிலப் படை குறுக்கிட்டது. எதிர்ப்பது ஹைதர் தலைவர்களுள் ஒருவனல்ல, ஹைதரே என்றறியாது சிக்கிய அப்படையில், தலைவனும் துணைத் தலைவனும் தவிர, ஒருவரும் தப்பவில்லை. துணைத் தலைவன் முன் ஆண்டில் சரணடைந்து, போர் முடிவு வரை போரிலீடு படுவதில்லை என்ற உறுதியின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தான். உறுதி தவறிய குற்றத்திற்காக, அவன் மீதி வாழ்நாளைச் சீரங்கப்பட்டணம் சிறையில் கழித்தான்.

ஆர்க்காட்டு நவாபின் ஆட்சிப் பகுதி முழுவதையும், இப்போது ஹைதர் தன் கைக்குள் ஒரு ஆண்டுக்குள், கொண்டு வந்து விட்டான். அது போதாமல், திடுமென மின்னல் உருகிப் பாய்ந்தது போல், சென்னையருகே பறங்கிமலையில் வந்து, பாளையமடித்துக் கொண்டு, ஆங்கிலேய அரசியலாரை அவன் நடுநடுங்க வைத்தான்!