பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப் பாறை

3

அவர்கள் தம் சிறுதனி நலத்துக்காகப் பயன்படுத்தி, அதில் குளிர் காய எண்ணினர்.

விடுதலைப் பூஞ்சோலையில், இவ்வாறாக வேற்றுமைப் புயலடிக்கத் தொடங்கிற்று. ஒற்றுமை சாயத் தலைப்பட்டது. சதியும், பூசலும் சதிராட முற்பட்டன. அஞ்சாநெஞ்சன் ஹைதர் இத்தனை சூழல்களையும் தன்னந்தனியனாய் நின்று, மும்முரமாகத் தாக்கினான். சாய்வைத் தடுக்க முயன்றான். ஒற்றுமையைத் தானே படைத்து, உருவாக்க விரைந்தான். அவ்வொற்றுமைப் பாறையின் முகட்டில், விடுதலைக் கொடியை உயர்த்தி விட அவன் விதிர்விதிர்த்தான்.

சாய்வை அவனால் நீண்ட நாள் தடுத்து நிறுத்த முடியவில்லை. சாய்வு வலுத்தது. விடுதலைக் கொடியை அவனால் ஏற்ற முடியவில்லை. வேற்றுமைப் புயல், மேலும் கீழும் நாலா புறமும் குமுறியடித்தது. ஆனால் புயலிடையே மின்னல் போல, அவன் சுழன்று சுழன்று போராடினான். அப் புயலின் வீச்சு, எதிர் வீச்சுக்களையெல்லாம் சமாளித்து, அவன் விடுதலைக் கம்பத்தின் அடிப்படைக் கல் நாட்டினான்.

புயல் எளிதில் அமையவில்லை. ஆனால், புயலிடையே ஹைதர் நட்ட கல், அந்தப் புயலடியிலேயே அசையாத விடுதலைப் பாறையாய் நிலவிற்று.

புயலிடையே ‘வீர வெற்றிச் சிங்கம்’ ஹைதர் நாட்டிய அடிப்படைக் கல்லின் மீதே, பின்னாளில் வீரபாண்டியக் கட்டபொம்மன் விடுதலைக் கொடி நாட்டினான்.

ஹைதரின் புதல்வன் திப்பு, சிங்கத்தின் பின் வந்த சிங்கமாய், அந்தக் கொடியை உலக அரங்குக்கே உயர்த்த முயன்றான். அவன் முயற்சி வெற்றி பெறவில்லையானாலும், வீணாகவில்லை. அதன் எதிரொலியே வெள்ளையரைப் பின்னாளில் வெருட்டித் துரத்தியடிக்க முடிந்தது.