பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

முற்றுகையிட்டனர். இறுதியில் 1772-ல், 15 இலட்சம் வெள்ளி உடனடியாகப் பெற்று, இன்னொரு 15 இலட்சத்துக்குச் சில மாவட்டங்களை ஈடாக ஏற்றுக் கொண்டு, அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

சிறையிலிருந்த, பதவியிழந்த அரசச் சிறுவன் நஞ்சி ராஜன், மராட்டியருடன் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிந்ததால், அவன் கொலைத் தண்டனைக்கு ஆளானான். அவன் தம்பி சாமராஜ், அவனிடத்தில் மன்னுரிமையாளனானான்.

1772-ல் பேஷ்வா மாதவ ராவ் மாண்டான். அவனுக்கடுத்த தம்பியாகிய நாராயண ராவ் பேஷ்வாவானான். அவனைக் கொன்றொழித்து, அவன் சிற்றப்பன் ரகோபா பேஷ்வாவாக முயன்றான். ஆனால், மராட்டியரில் பெரும்பாலார் இறந்த நாராயண ராவின் சிறுவன் மாது ராவையே பேஷ்வாவாக ஏற்க விரும்பினர். அரசுரிமைப் போர் ஒன்று தொடங்கிற்று. இத்தறுவாயைப் பயன்படுத்திக் கொண்டு, மராட்டியருக்குப் பிணையாகக் கொடுத்த பகுதிகளை மீட்கும்படி, ஹைதர் திப்புவை அனுப்பினான். அத்துடன், தானே சென்று மராட்டியப் போர்க் காலத்தில் கிளர்ந்தெழ முயன்ற, மலபார் தலைவர்களைக் கீழடக்கினான்.

1773-ல் பேடனூர் அடுத்திருந்த குடகுப் பகுதியின் ஆட்சி மரபில், அரசியல் பூசல் எழுந்தது. அதன் மூலம், ஹைதர் தன் பேரரசை மேலும் பெருக்கி, வளமாக்க வழி ஏற்பட்டது.

குடகு, பேடனூரைப் போலவே, மலபாருக்கும், மைசூருக்கும் இடைப்பட்ட மலை நாட்டுப் பகுதி. அங்குள்ள மக்கள், வீர தீரமுடையவர்கள். தங்கு தடையற்ற விடுதலை வாழ்வுடையவர்கள். அவர்கள் சிறு சிறு சிற்றூர்களில் வாழ்ந்தனர். ஒவ்வொரு சிற்றூரிலும் நடுவே ஊர்த் தலைவன்