பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியின் பதுங்கலும் பாய்தலும்

81

வீடும் நிலமும் இருந்தன. அதைச் சுற்றி, அவனுக்கு உட்பட்ட அவன் உறவினர் வாழ்ந்தனர். இச்சிறு நாட்டின் மன்னர் லிங்காயதர் அல்லது வீர சைவராகயிருந்தனர்.

17-ம் நூற்றாண்டு வரை, இப்பகுதியில் குடி மரபாட்சியே நிலவிற்று. ஆனால், அந்நூற்றாண்டில், இச்சேரி அரச மரபைச் சேர்ந்த ஒருவன் பக்தனாக வந்து தங்கி, மக்கள் மதிப்பைப் படிப்படியாகப் பெற்று, அவர்கள் மீது ஆட்சி செய்யத் தலைப்பட்டான். நாளடைவில் குடகையும், குடகைச் சூழ்ந்த எல்லாப் பகுதிகளையும், அவன் தன் கீழ்க் கொண்டு வந்தான். ஹைதர் பேடனூரை வென்ற பின், குடகையும், அதைச் சேர்ந்ததாகவே கொள்ள எண்ணி, 1765-ல் ஒரு படை அனுப்பினான். இத்தடவை அவன் முயற்சி பலிக்கவில்லை. ஆனால், 1770-ல் எழுந்த ஆட்சியுரிமைப் பூசலில், ஆட்சி உரிமையாளரில் ஒருவனான லிங்க ராஜ், ஹைதர் உதவியைக் கோரினான். குடகுப் படையெடுப்புக்கு வழி கோலிய நிகழ்ச்சி இதுவே.

மாற்றுரிமையாளனான தேவப்பன், ஓடி ஒளிய முயன்றான். ஹைதர் அவனைக் கைப்பற்றிச் சீரங்கப்பட்டணம் சிறைக்கூடத்துக்கு அனுப்பினான். மெர்க்காரா நகரம், ஹைதர் பேரரசின் ஒரு பகுதியின் தலைநகரமாயிற்று.

ஹைதர் தன் வழக்கம் போல், குடகில் பிராமணர்களை உயர் பதவிகளில் அமர்த்தினான். மக்களை அவர்கள் கொடுமைப் படுத்தி, மிகுதி வரி பிரித்தனர். இது தாளாமல், அவர்கள் எங்கும் கிளர்ந்தெழுந்தனர். ஹைதர், கிளர்ச்சியை அடக்கக் கடு நடவடிக்கைகளை மேற்கொண்டான். ஆயினும், இதன் பின், பதவிகளில் அவன் குடிகளிடம் நேர்மையாக நடக்கத் தக்க பொறுப்புடைய நன்மக்களையே அமர்த்தினான்.

6