பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

மொழிக் கொடையை, செயல் முறைக் கொடை ஆக்குவதில் சிறிதும் நாட்கடத்தவில்லை. ஒரு சில மாதங்களுக்குள், மராட்டியப் பேரரசின் கன்னட மொழிப் பகுதி முழுவதையும் அவன் வென்று, மைசூர்ப் பேரரசின் பகுதியாக்கினான்.

ஹைதரின் மைசூர்ப் பேரரசு, இப்போது கிட்டத்தட்ட உச்ச அளவு பரப்பெல்லையும், உச்ச அளவு ஆற்றலும் உடையதாயிற்று. அதன் மீது மேலாட்சியுரிமை நாடியிருந்த மராட்டியப் பேரரசும், நிஜாம் பேரரசும் இப்போது மைசூரைப் பார்க்க இரண்டாம் தரப் பேரரசுகளாய் விட்டன. இந்நிலைமையைக் கண்ட நிஜாமும், ரகோபாவின் மராட்டிய எதிரிகளான பூனா அமைச்சர் குழுவினரும், புழுக்கமடைந்தனர். அவர்கள் விரைவில், மைசூருக்கு எதிராக ஒப்பந்தம் செய்து கொண்டு, மைசூர் மீது படையெடுத்தனர்.

நிஜாம்—பூனா நேசப் படையின் முன்னணியை, ஹைதர் சாவனூர் அருகில் சந்தித்தான். ஸான்ஸிப் போரில், ஹைதரின் படைத் தலைவன் முகமதலி, தன் படைகளுடன் ஓடுவதாகப் பாசாங்கு செய்து, மராட்டிய முன்னணிப் படைகளை, மைசூர்ப் பீரங்கிகளின் எல்லைக்குக் கொண்டு வந்தான். பீரங்கிகளின் நெருப்புக்குப் படையின் பெரும் பகுதி இரையாயிற்று. மீந்தவர், தீய்ந்து கருகிய குறையுடலுடன் ஓடி, எங்கும் கிலியைப் பரப்பினர்.

முன்னணியைத் தொடர்ந்து, பின்னால் இப்ராஹிம் கான் தலைமையில் 40,000 வீரருக்குக் குறையாத நிஜாம் படை வந்து கொண்டிருந்தது. முன்னணியிலிருந்து ஓடி வந்தவர்கள் கிலி, அவர்களைக் கிருஷ்ணா ஆறு தாண்டி ஓட வைத்தது. பரசுராம் பாலாவின் தலைமையில் வந்த பூனா அமைச்சரின் மராட்டியப் படையோ, அடோஸி வரை அசைந்தசைந்து வந்தது. படையிலிருந்து விலகிச் செல்பவர்களுக்கெல்லாம்