பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


10. விடுதலைப் போராட்டம்

ஹைதர் வாழ்விலும், ஆட்சியிலும் 1779-ம் ஆண்டு ஒரு திரும்புக் கட்டம் ஆகும். அது வரை, அவன் மைசூர் அரசுக்காகவும், மைசூர்ப் பேரரசுக்காகவும் போராடினான். போரை அவன் அது வரை, ஆட்சியின் உயிர் முறையாகக் கையாண்டிருந்தான். ஆனால், அந்த ஆண்டில் அரசு, பேரரசு வளர்ச்சியில் அவன் ஆர்வம் குறைவதையும், போரிலிருந்து திரும்பி, மனம் அமைதியை நாடுவதையும் நாம் காண்கிறோம். அவ்வாண்டின் பின்னும், அவன் போரிலீடுபட வேண்டி வந்தது. ஆனால், அது பாதுகாப்பு நாடிய அரசியல் போரோ, ஆதிக்கம் நாடிய பேரரசுப் போரோ அன்று. அது, அவன் இறுதி மூச்சு வரை நடத்திய போர்—வேண்டா வெறுப்புடன், பிற பேரரசர் தூண்டுதலால் தொடங்கப் பெற்று, அத்தூண்டுதல் நீங்கிய பின்னும், விடாப்பிடியுடன் நடத்தப்பட்ட ஹைதரின் தென்னாட்டுத் தேசீய விடுதலைப் போரேயாகும்.

ஹைதரின் பேரரசு வளர்ச்சியில், கடைசிப் படி கடப்பை வெற்றியைத் தொடர்ந்து வந்த சாவனூர் வெற்றியேயாகும். ஆனால், இவ்வெற்றி போரின் வெங்குருதியால் நிறைவேற்றப் படவில்லை. மணவுறவுக் கலப்பு என்னும் செங்குருதியால் நிறைவேற்றப்பட்டது. ஹைதரின் மூத்த புதல்விக்குச் சாவனூர் நவாப் அப்துல் ஹகீமின் மூத்த புதல்வனையும், இளைய புதல்வனாகிய கரீமுக்கு, அப்துல் ஹகீமின் புதல்வியையும், ஹைதர் மண நாடினான். இம்மண உறவின் இனிய சின்னமாக, நவாப் மைசூர்ப் பேரரசுக்குச் செலுத்த வேண்டிய திறை பாதியாக்கப்பட்டது. அதே சமயம், மைசூர்ப் படைக்கு நவாப் 2,000 வீரரை உதவும் கடப்பாட்டை ஏற்றான். இம்மண விழா