88
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
மற்ற இரு அரசுகளும் மனமுவந்து, ஹைதருடன் சேர்ந்து ஆங்கில அரசை எதிர்க்க முன் வந்தன.
மராட்டியரிடையே, பேஷ்வா ரகோபா பம்பாய் ஆங்கிலேய அரசியலாருடன், 1775-ல் வர்காம் ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை செய்து கொண்டான். பேரரசு ஒரு கூட்டுறவானதால், அதன் முக்கிய உறுப்பினரும், கூட்டுறவின் அமைச்சரும், மக்களும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த போது, விரைவில் ரகோபாவின் கை வீழ்ச்சியடைந்தது. மராட்டியர், ஆங்கிலேயரை எதிர்க்கத் துடிதுடித்தனர்.
நிஜாமுக்கெதிராக, ஆங்கிலேயரைத் தூண்டியவன் ஆர்க்காட்டு நவாப் முகமதலியேயாவான். நிஜாம், வட சர்க்கார் என்ற ஆந்திரக் கரையோரப் பகுதியின் உரிமையாளன். அதில் குண்டூரை, நிஜாம் மனமாரத் தன் தமையன் பஸாலத் ஜங்குக்கு விட்டுக் கொடுத்திருந்தான். ஆனால், முகமதலியின் சூழ்ச்சியால், 1778-ல் ஆங்கிலேயர் நிஜாமைக் கலக்காமல், அதைத் தமக்கென ஆண்டுக் குத்தகையாகப் பெற்று, முகமதலியிடமே அதை வழங்கினர். நிஜாமின் மேலுரிமை, நில உரிமை ஆகியவற்றுடன் அவன் குடியுரிமையும் இங்கே மிதித்துத் துவைக்கப்பட்டது. நிஜாம் இதைக் கண்டித்த போது, ஆங்கிலேயர் வாளா இருந்ததுடன் நில்லாது, ஆண்டுக் குத்தகைத் தொகையும் இனித் தரப்பட மாட்டாது என்று இறுமாப்புடன் கூறினர். இதுவே, ஆங்கிலேயர் மீது நிஜாமுக்கு ஏற்பட்ட உள்ளக் குமுறலுக்குக் காரணம்.
மராட்டியரும், நிஜாமும், ஆர்க்காட்டு நவாபைப் போல, ஆங்கிலேயரின் கூலியாட்கள் ஆய் விடவில்லை. ஆயினும், அவர்கள் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு நேராகவோ, மறைமுகமாகவோ ஆக்கமளித்த அடிமைகளாகவே இருந்து வந்தனர். வளர்ந்து வந்த ஆங்கில ஆதிக்கம் இவ்வடிமைகளையே