விடுதலைப் போராட்டம்
89
நட்பிணக்கத்துடன் மதிக்கவில்லையென்றால், நாட்டின் தலை சிறந்த வல்லரசாக வளர்ந்து வந்த மைசூர் மன்னன் ஹைதரை, நேசிப்பார்களென்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், ஹைதரிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை பகைமை முறை மட்டுமல்ல; அவனையும், அவன் மூலமாகத் தென்னாட்டுத் தேசீயத்தையும் மதியாத, அயலார் ஆதிக்கப் போக்காகவே அது அமைந்தது.
ஹைதர் அரசியல் நேர்மையை எல்லாரிடமும் எதிர்பார்த்தவன். பிரெஞ்சுக்காரரிடம், அந்த நேர்மையே அவன் மதிப்பையும், பற்றையும் வளர்த்தது. தனி மனிதர் வகையில் ஆங்கிலேயரிடமும், அவன் அதே மதிப்பு வைத்திருந்தான். ஆனால், ஆங்கில அரசியல் ஆதிக்கக் குழுவினர், அந்த நேர்மையையும், கட்டுப்பாட்டையும் கடைப் பிடித்தவர்களாகத் தோன்றவில்லை. 1769-ல் ஹைதருடன் செய்து கொண்ட உடன்படிக்கையை, அச்சத்தால் செய்து கொண்ட உடன்படிக்கை என்று அவர்கள் வெட்கமில்லாமல் கூறினர். அதே சமயம், சென்னை அரசியலை மதியாது, இங்கிலாந்திலுள்ள வாணிகக் குழுவுடன் நேரடியாகத் தொடர்பு நாடிய முகமதலியைக் கெஞ்சி வாழ, அதே அரசியலார் கூசவில்லை!
ஹைதர் அலியின் ஒப்பந்தத்தை ஒழித்து, அவனை எதிர்த்தழிக்க வேண்டுமென்று முகமதலி, இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் வாணிகக் குழுவினிடம் வாதாடினான். ஆனால், அதே நாவால், ஹைதரிடம் ஆங்கிலேயரைத் தென்னாட்டை விட்டுத் துரத்தத் தன்னுடன் ஒத்துழைக்கும்படி கோரிக்கையிட்டான்! ஹைதர் அவன் குள்ள நரிப் பண்பை அறிந்தவனாதலால், செய்தியை ஆங்கிலேயருக்குத் தெரிவித்திருந்தான்.ஆனால், வாய்மையையும், நேர்மையையும் நம்பாத மனிதர் அன்று சென்னையில், ஆங்கில ஆட்சியாளராய் அமர்ந்து இருந்தனர்,