பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

வளர்கின்ற தன் தென்னக வல்லரசுக்கு, ஹைதர் வெடி மருந்தும், போர்ச் சாதனங்களும் பெற விரும்பினான். ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்வதன் மூலம், அவர்கள் நேசத்தால் இதைப் பெற, அவன் மிகவும் முயன்றான். இது முடியாதென்று கண்ட பின், அவன் மாகியிலுள்ள பிரெஞ்சுக்காரரிடமிருந்து, இவ்வுதவியைப் பெற்று வந்தான். ஆனால், 1778-ல் ஆங்கிலேயர் மாகியைக் கைப்பற்றியிருந்தனர். மலபார் உட்படத் தென்னாட்டின், மேலுரிமையுடைய பேரரசன் என்ற ஹைதர் நிலைக்கும், அவன் பேரரசின் தேவைக்கும், இது குந்தகமாயிருந்தது. தவிர, மாகியில் உள்ள தன் உரிமை காரணமாக, அதன் பாதுகாப்பில் ஹைதர் வீரரும் பங்கு கொண்டிருந்தனர். அது தாக்கப்படு முன், மாகியை ஆங்கிலேயர் தாக்கினால், தான் ஆர்க்காட்டைத் தாக்க வேண்டி வரும் என்று கூட, ஹைதர் எச்சரித்திருந்தான். ஆங்கிலேயர் காதில், இவை ஒன்றும் ஏறவில்லை.

கடைசியாக, குண்டூரை ஆங்கிலேயர் கைப்பற்றிய போது. ஆங்கிலேயப் படைகள் ஹைதரின் இணக்கம் பெறாமலே, ஹைதரின் ஆட்சிப் பகுதி வழியாக, அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டன. இது ஹைதரின் ஆட்சியுரிமைக்கு எதிரானது. குண்டூர் முகமதலிக்குக் கொடுக்கப்பட்ட போதும், நிஜாமைப் போலவே, ஹைதர் மனக்குமுறல் அடைந்தான். ஏனெனில், முகமதலியை அவன் தன் எதிரியாக மட்டுமன்றி, தன் மாநிலத் தாயகமாகிய தென்னகத்துக்கும், மனித சமுதாயத்துக்குமே எதிரி எனக் கருதினான்.

தன் குறைகளையெல்லாம் ஹைதர், சென்னை ஆட்சியாளரிடம் தெரிவித்திருந்தான். அதற்கு மறுமொழி இல்லாத நிலையிலும், ஆங்கில ஆட்சியாளரின் இரகசியத் தூதரான