பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கன்பூசியஸின்


இவர்களது ஏகபோக அதிகாரப் போக்கால், உழவர் பெருமக்கள் பெருத்த வேதனைகளை அனுபவித்தார்கள். அரசு மதமாகவும், அரசவை தெய்வீகசபையாகவும், அரசர்கள் தேவதூதர்களாகவும் நடந்து கொண்டதால், பலாத்காரங்களின் மூலமாக மக்களிடமிருந்து எல்லா வரிகளும் வசூலிக்கப்பட்டன! எனவே எல்லா சிற்றரசுகளின் அன்றாடச் செயல்களும் மதச் சடங்குகள் போலவே நடந்து வந்தன!

இதன் காரணமாக குருமார்கள் ஆதிக்கம் வலுத்தது. அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒவ்வொரு ஆச்சார அர்த்தத்தை விளக்கி வியாக்கியானம் கூறும் இந்த குருமார்கள்-சமுதாயத்தில் தனியொரு சாதியாகப் பிரிந்து, வாழ்ந்து உயர்ந்து நின்றார்கள்.

இதனால், கோஷ்டிச் சண்டைகள் பெருகின; ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தன; விதண்டா விவாதங்கள், போட்டிப் பொறாமைச் சச்சரவுகள் சிற்றரசர்களுக்குள்ளேயே போர் நிலைகள், அதனால் மக்கள் இடையே உள்நாட்டுக் குழப்பங்கள் உருவாகி மலிந்தன.

கன்பூசியஸ் வாழ்ந்தபோது, மத்திய ஆட்சி பலவீனமாகியதால், சட்ட அமைப்பு, சமுதாய அமைப்பு, பொருளாதாரச் சீர்குலைவு, அறநெறி அழிவுகள் எல்லாம் உடைத்து சின்னாபின்னப்பட்டு, பொது மக்களது வாழ்க்கை நிலைக்கு உத்தரவாதமற்று, சீன நாட்டு மக்கள் அல்லோலகல்லோலமாக உருக்குலைந்து ஒழுங்குமுறையற்று வாழ்வதைக் கன்பூசியஸ் நேரிடையாகவே பார்த்தார்!

அரசன் அரசனாக நடக்காவிட்டாலோ, அமைச்சர் அமைச்சராக இயங்கா விட்டாலோ உலகில் குழப்பம்தான் உருவாகும் என்பதை அப்போதுதான் கன்பூசியஸ் உணர்ந்தார்.