பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கன்பூசியஸின்

முறை; அறிவை ஊட்டவும், வளர்க்கவும் உதவுகிறது. ஆனால், அது மனிதரின் மன அரங்கில் தோன்றக்கூடிய உணர்ச்சி பாவங்களை நெறிப்படுத்தி, பக்குவமடையச் செய்ய உதவுவது இல்லை என்று பல அறிஞர் பெருமக்கள் இன்றையக் கல்வி முறையைப் பற்றிக் குறை கூறுகிறார்கள். சிலர் கண்டனக் குரலையும் எழும்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயத்தில் பயனுள்ள அங்கத்தினனாக வாழ்வதற்குத் தேவையான மனப்பக்குவம், அறிவு, வளர்ச்சியை ஊட்டும் வகையில் கல்வி முறையை முதன்முதலில், உலகத்தில், சீனநாட்டில், வகுத்துக் காட்டிய வல்லமை, பெருமை, மாபெரும் ஞானியான கன்பூசியசுக்கே உரியதாகும்.

கன்பூசியஸ் உருவாக்கிய கல்வி முறை, உலக வாழ்வின் போக்கிலே மனிதன் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்து, மனப்பக்குவத்தை வளர்க்கும் வகையிலும் உருவாக்கப்பட்டதாகும்.

ஒருவன் தன்னையே தான் உணர்ந்து, தனது சமுதாயத்தில் தானும் ஓர் அங்கமாகி, அன்போடும், பண்போடும் அருளோடும், அறநெறிகளோடும் வாழ்ந்து, இயற்கையோடு இன்பம் பெரும் அற்புதமான வழியையும் கன்பூசியசின் கல்வித் திட்டம் மக்களுக்குக் கற்பிக்கின்றது.

'அறிவுக்காக அறிவை அடைவதைவிட, தன்னைப் பண்படுத்தி வளர்ப்பதற்காக அறிவைப் பெறுவதுதான் கல்வியின் உண்மையான பயன்’ என்று கன்பூசியஸ் தனி மனிதனை வற்புறுத்துகிறார்.

சிந்தனை இல்லாத படிப்பு சிறக்காது; வீணானது; படிப்பு இல்லாத சிந்தனை பாழானது; ஆபத்தானது! என்று நம்மை அவர் எச்சரிக்கின்றார்.