பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

45


இத்தகைய ஒரு ஞான செல்வரிடம் கல்வி பயின்றிட சீன நாட்டின் எல்லை முனைகளிலே இருந்ததனால் மாணவர்கள் அணியணியாகத்திரண்டு வந்து கல்வியைக் கற்றார்கள். சீனாவின் பல பகுதிகளில் இருந்தும் அவர்கள் வந்து குவிந்தார்கள், இவ்வளவு பெரிய மாணவர்களது குழுக்களை அழைத்துக்கொண்டு, கான்பூசியஸ் மகான் நடமாடும் ஒரு ஞான போதியாகவே முழுவதுமாகச் சுற்றிச் சுற்றி வந்தார்.

சீடர்கள் அவ்வாறு அவர் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மாணவன் இறந்து விட்டான். அதைக் கண்ட கன்பூசியஸ் துக்கம் தாங்காமல் கதறியும் விம்மியும் கண்ணீர் விட்டு ஓவென்று அழுது அப்படியே மெய்மறந்து அமர்ந்து விட்டார்.

இவ்வளவு மாணவ மணிகளையும் அணியணியாக சேர்த்து ஏன் குருகுல வாழ்வை கன்பூசியஸ் நடத்தி வந்தார்? குருவினுடைய கொள்கைகளை, மாணவர்கள் அணியினர் அனைவரும் ஒவ்வோர் ஊராகச் சென்று மக்களிடையே அவற்றை எடுத்துக்கூறி மக்களைத் திருத்துவார்கள் என்ற நம்பிக்கைதான் மூலக் காரணமாகும்.

கன்பூசியஸ் என்ற மாபெரும் ஞானியின் பின்னால் நாட்டை வலம் வந்தவர்கள் சாமான்யர்கள் அல்லர்! இலக்கிய மேதைகள், வரலாற்று வித்தகர்கள். வேத விற்பன்னர்கள்; அரசியல் அறிஞர்கள்; அறிவொளி பரப்பும் ஆசான் பெருமக்கள், தத்துவ ஞானிகள் செல்வாக்கப் படைத்த செல்வர்கள் போன்றவர்கள் ஆவர் அவர்கள் எல்லாம் கன்பூசியஸ் மகானின் குருகுலத்தில் ஞானப் போதனை பெற்றவர்களாவர். இவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளுக்குச் சென்று கன்பூசியஸ் ஞானத்தைப் போதிக்க பரம்பரையாகத் திகழ்ந்தார்கள்.