பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

49


இவ்வாறு, வானகம் தரும் ஒளியை இயற்கை நியதி என்கிறோம். இந்த இயற்கையின் வழிதான் நமது கடமையின் வழியாகும் என்று கன்பூசியஸ் விளக்குகின்ற உண்மை, மனித இன ஒழுக்கத்திற்குரிய மூலஸ்தானம் என்றும் குறிப்பிடுகிறார்.

நமது கடமை என்பது, வெளியிலே இருந்து வரும் கட்டளைகளோடோ, தடைகளோடோ சம்பந்தப்பட்டவை அல்ல. நமது உயிர்க்குள் இருக்கும் இயற்கையான பகுத்தறிவைப் பிறவியிலேயே நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அந்தத் தெய்வீக ஒளியை வளர்ப்பதும், நாம் நமது ஒழுங்கு கெட்டுப் போகாமல், நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் தன்மைகளோடு இணைந்து, இசைத்து இயங்கும் தன்மையை அடைவதும் மனிதர்களுடைய கடமையாகும்.

'பரிபூரணம் என்பது வானகத்தின் சட்டம். பரிபூரணம் அடைதல் என்பது மானிடத்தின் சட்டம்! இவ்வாறு, மனித நடத்தைக்கும், மாபெரும் உலகத் திட்டத்திற்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்தியுள்னார்.

பொது உலகப் போக்கோடு மனிதனின் செயல்களும், நடத்தைகளும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். ஒன்றுபட்டிருக்க முடியும். அப்போதுதான், மனித ஒழுக்கம் உண்மையான, கண்கண்ட நடத்தையாக இருக்கும் என்கிறார்.

தமது தெய்வீக ஒளி பொருளாதார உணர்ச்சி என்ற இருளில் மூழ்கிவிட்டது. ஆனால், அந்த ஒளி மங்கி விட்டதே தவிர முழுவதுமாக அணைந்து விடவில்லை; என்றும் விளக்கமளித்துள்ளார். உலகப் பொது ஒழுக்கமும் உலக ஒழுக்க அறிவும் கன்பூசியஸ் சிந்தனையில் நிலையாக இடம் பெற்றுள்ளதை இங்கே பார்க்கின்றோம்.