பக்கம்:கபாடபுரம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கபாடபுரம்


பெருங் கலகலப்பு நிறைந்திருக்கும். சுங்கச்சாவடிகளில் அடல்வாள் யவனர் காவலுக்கு நின்றிருப்பர். இசை மண்டபங்களிலே பண்ணொலிக்கும். ஆடலரங்குகளிலே அவிநயம் அழகு பரப்பும். சங்கங்களிலே தமிழிலக்கண இலக்கிய ஆராய்ச்சிகள் நிகழும். இத்தகைய வெற்றித் திருநகரை உருவாக்கிய வெண்தேர்ச் செழியனின் தள்ளாத முதுமைக் காலத்தில் அவன் மகன் அநாகுல பாண்டியன் பட்டத்துக்கு வந்த பின் இந்தக் கதை தொடங்குகிறது. இந்தக் கதை தொடங்கும் காலத்தில் அநாகுல பாண்டியனின் ஒரே மகனும் பாண்டிய நாட்டுக் கபாடபுரத்து இளவரசனும் வெண்தேர்ச் செழியனின் பேரனுமாகிய சாரகுமாரன் மாறோக மண்டலத்துக் கொற்கையிலும் பூழியிலும் மணலூரிலுமாகத் தமிழ்ப் புலவர்களிடம் சில ஆண்டுகள் குரு குல வாசம் செய்துவிட்டு நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரத்துக்குத் திரும்புகிறான்.

அந்த ஒரு நன்னாளில் இங்கே அவனைச் சந்திக்கிறோம் நாம். ஆண்டு தோறும் வசந்த காலத்தில் சித்திரைத் திங்கள் சித்திரை நாளன்று கபாடபுரத்தை நிறுவிய வெண்தேர்ச் செழிய மா மன்னர் அந்த மாநகர் உருவான ஞாபகத்தைக் கொண்டாட விரும்பி ஒரு நகர்மங்கல விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆண்டு தோறும் அவர் நிகழ்த்தியதைவிட நன்றாக அவர் கண் காணவே இன்றும் சிறப்பாக - இந்த நகர் மங்கலத்தைக் கொண்டாடி வந்தான் அநாகுலன். முத்துக் குளியலும், இரத்தினாகரங்களில் மணி குவித்தலும் சிறப்பாக நடைபெறும் காலமும் இந்த வசந்த காலமேயாகையினால் கபாடபுரத்தில் பல நாட்டு மக்களும் கூடுகிற மாபெரும் விழாக்காலம் இது தான். இனி வாருங்கள். கபாடபுரத்தின் இந்த நகரணி மங்கல நாளில் நாமும் அங்கு போகலாம். கபாடபுரத்தைக் கண் குளிரக் கண்டு மகிழலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/10&oldid=489909" இலிருந்து மீள்விக்கப்பட்டது