பக்கம்:கபாடபுரம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

101


தயங்கி நின்று அந்தப் புன்னைமரக் கூட்டத்தில் சுற்றும் முற்றும் கவனிக்கலானான் சாரகுமாரன்.

அங்கே சிறிது தொலைவில் ஒரு புன்னை மரத்தினடியில் வெண்பட்டு விரித்தாற்போன்ற மணற்பரப்பில் அந்தக் காட்சி தெரிந்தது. கண்ணுக்கினியாள்தான் மணற்பரப்பில் ஒசிந்தாற்போல அமர்ந்து வேறு யாரோ இரண்டு பெண்களுக்குப் பாடிக் காட்டிக்கொண்டிருந்தாள். அவள் பாடிக் கொண்டிருந்த இடத்திற்கருகே நீர் தேங்கியிருந்த சிறு பள்ளம் ஒன்றில் நெய்தல் பூக்கள் நிறையப் பூத்திருந்தன. அந்தப் பள்ளத்திற்கு அப்பால் பசுமைச் சுவரெடுத்ததுபோல் தாழை மரங்கள் புதராய் மண்டி வளர்ந்திருந்தன. மணற் பரப்பில் முத்துதிர்த்தாற்போலவும் தற்செயலாய் நேர்ந்த அவளுடைய அந்த இசையரங்கிற்கு ஒர் அலங்காரம் செய்தாற்போலவும் புன்னைப் பூக்கள் நிறைய உதிர்ந்திருந்தன.

தங்களுடைய திடும்பிரவேசத்தினால் அவள் தனது பாடலை நிறுத்திவிடக்கூடுமோ என்றஞ்சிய சாரகுமாரன் - நின்ற இடத்திலிருந்தே மறைந்து கேட்கலானான். தனிமையையும், தான் எக்காரணத்தைக் கொண்டும் தயங்கவோ தளரவோ, அவசியமில்லாதவர்களுக்கு முன் பாடுகிறோம் என்ற உணர்வையும் ஒரு விநாடி மாற்றிவிட்டால்கூட அந்தப் பெண்ணின் அழகும் மாறிவிடும். அது தெரிந்துதான் அவள் பாடி முடிகின்றவரை மறைந்து நின்று செவிமடுத்த பின்பு நேரில் எதிரேபோய் நின்று பாராட்டலாமெனக் கருதியிருந்தான் இளையபாண்டியன். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் நகரணி மங்கல நாளுக்காக வந்து பாணர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து தன் தோழிகளோடு சிறிது தொலைவு விலகிவந்து இருந்து பாடும் காரணத்தாலேயே அவன் தனிமையை நாடி வந்திருப்பதை உணர முடிந்தது.

பாடி முடிந்தபின் அவள் மணற்பரப்பில் உதிர்ந்திருந்த புன்னைப் பூக்களைத் தொகுக்கத் தொடங்கினான். அவள் தோழிகளோ நீரில் இறங்கி நெய்தற் பூக்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/103&oldid=490027" இலிருந்து மீள்விக்கப்பட்டது