பக்கம்:கபாடபுரம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

111


வழிமுறையினரோதான் இப்போது இங்கு நம்மைச் சுற்றி இருக்கும் அவுனர்களாவர்.

"காரணம்கருதியே அவர்களை நான் பொதுவாக விட்டு வைத்திருகிறேன். விரோதிகளாக ஏற்றுக்கொண்டு அழிக்க முயலவுமில்லை. நண்பர்களாக ஏற்றுக்கொண்டு கொண்டாடவுமில்லை. மனம் இடைவிடாமல் நினைப்பதற்கும், பாவிப்பதற்கும் விளைவுகள்கூட நாளடைவில் ஏற்பட்டுவிடுமென்ற நம்பிக்கை எனக்கு உண்டு. சிலரைக் காரணமின்றி பகைவர்களாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டோமென்றால் நாளடைவில் நாம் அவர்களிடமிருந்து பகைத்தன்மைக்குரிய தீவிரவிளைவுகளையே எதிர்பார்க்கலாம். அவுணர்களை நான் அப்படிக் கருதாததற்கு இதுதான் காரணம். வெறும் சுரங்கங்களால் என்ன செய்துவிடமுடியும்? எங்காவது அயர்ந்த இடங்களில் கொள்ளையடிக்கிற முத்துக்களையும், இரத்தினங்களையும் தங்கள் தீவுகளுக்குக் கடத்திக் கொண்டு போகமுடியும். தேர்களை - ஓர் அணுவளவுகூட அசைக்க முடியாது. கடல்நீரில் தேர்களை ஒட்டிக்கொண்டு போய் அவர்களுடைய தீவுகளில் நிறுத்திவிட முடியாது. ஆகவேதான் இவர்களைப் பெரிதாகப் பொருட்படுத்தி நான் கவலைப்படவில்லை.

"ஆனால் என்னுடைய கவனம் ஒரு பகுதியில் மட்டும் கூர்மையாக இருக்கிறது. இந்த அவுணர்களில் சிலர் நமது கோ நகரத்தின் தெய்வீகக் கபாடங்களிலுள்ள இரத்தினங்களைப் பெயர்த்துக்கொண்டு போய்விடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருவதாகக் கேள்விப்படுவதைமட்டும் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது. அவர்கள் இங்கு குளித்தெடுக்கப்படும் முத்துக்களையும், நமது மகேந்திரமலை இரத்தினாகரங்களில் விளையும் இரத்தினங்களையும் வாரிக்கொண்டு போனால்கூட ஒரளவு அவற்றைப் பொறுத்துக் கொள்ளலாம். கபாடங்களை நெருங்கினால் அவர்கள் தங்களுக்கே அழிவு தேடிக் கொள்கிறார்கள் என்றாகிறது... நீ ஒரு காரியம் செய்ய வேண்டும் சாரகுமாரா! உன்னுடன் நகரணி மங்கலத்துக்காக இங்கு நம் கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/113&oldid=490037" இலிருந்து மீள்விக்கப்பட்டது