பக்கம்:கபாடபுரம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கபாடபுரம்


நகரத்துக்கு வந்திருக்கும் அவிநாயனாரும், சிகண்டியாசிரியரும் ஏனைய சங்கப்புலவர்களும் சிறிது காலம் இங்கேதான் தங்கியிருப்பார்கள். அவர்களைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம்.

"முடிநாகனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பழந்தீவுகளில் பயணம்செய்து திரும்பிவரவேண்டும் நீ. அப்படிப் பயணம் புறப்படும்போது உனக்கு நினைவிருக்கவேண்டிய தெல்லாம் இது ஒர் இராஜதந்திரச் சுற்றுப்பயணம் என்பது தான். ஒவ்வொரு விநாடியும் இது உனக்கு நினைவிருக்க வேண்டும். இதற்குப் பழுது உண்டாக்கும் முறையில் முடிநாகனோ, நீயோ, உங்களை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது. பல ஆண்டுகளுக்கு முன் நான் கண்ட அதே நிலைகள்தான் இன்றும் தென்பழந்தீவுகளில் இருக்கின்றனவா அல்லது மாறுதல் ஏதேனும் உண்டா - என்பது எனக்குத் தெரியவேண்டும். நானே நேரில் போய்ச் சுற்றியறிந்து வருவதற்கு என் முதுமை இடங்கொடாது. உன் தந்தையைப் போகச் சொல்லலாம் என்பதற்கும் வழியில்லை. கோ நகரத்து அரசியற்கடமைகளை அவன் கவனிக்கவேண்டும். ஆகவே தவிர்க்க முடியாத காரணத்தால் உன்னையும் முடிநாகனையும் பழந்தீவுகளுக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளேன். குழந்தாய்!

"நான் கூறுகின்றவைகளைக் கவனமாகக்கேட்டுக்கொள். கொற்கையிலும், மணலூரிலும் தங்கி இலக்கண இலக்கியங்களைக் கற்று அறிவதுபோல் இது அவ்வளவு சுலபமான காரியமில்லை. நீயோ அரசியலின் பாலபாடத்தைக்கூட இன்னும் கற்கவில்லை. அரசியல் ஞானமும், சூழ்ச்சித் திறன்களும், படிப்படியாய் அனுபவங்களின் மூலமே கிடைக்க வேண்டும். சில அனுபவங்கள் நமக்குப் பாதகமாய் முடியலாம். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளலாம். இன்னும் சில அனுபவங்கள் நமக்குச் சாதகமாய் முடியும். அவற்றாலும் நாம் சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம். வேறு சில அனுபவங்களோ சாதகமாக முடியுமா, பாதகமாக முடியுமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/114&oldid=490039" இலிருந்து மீள்விக்கப்பட்டது