பக்கம்:கபாடபுரம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

கபாடபுரம்


அதனால் எனக்கும் சில அரசதந்திரப் பயன்கள் உண்டு" என்று புன்சிரிப்போடு அன்னைக்கு மறுமொழி கூறினான் அவன்.


16. எயினர் நாடு

தன் தாய் திலோத்தமையாருக்குச் சாரகுமாரன் நிறைய ஆறுதல் கூறவேண்டியிருந்தது. எவ்வளவு ஆறுதல் கூறியும் பழந்தீவுகளில் அவன் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்பதை மகனிடம் கவலையோடும், பாசத்தோடும் வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவள். அறிவுக்கும், அன்புக்குமிடையே இளைய பாண்டியனின் உள்ளம் சில நாழிகை நேரம் ஊசலாடியது. பாசம் என்னும் மெல்லிய உணர்வும் அறிவு என்னும் தீவிரமான கடமையும் போராடின. தான் ஆறுதல் கூறியது போதாதென்று முடிநாகனைக் கொண்டும் தாய்க்கு ஆறுதல் கூறச் செய்தான் இளையபாண்டியன்.

"இளையபாண்டியருக்குத் துணையாக அடியேனும் உடன் செல்லுவதால் கோப்பெருந்தேவி - இவ்வளவு மிகையாகக் கவலைப்படவேண்டியதில்லை. பொதுவாக அரசகுமாரர்கள் பட்டத்துக்கு வருமுன் தன் நாட்டிற்கு நான்கு புறத்துமுள்ள கடல் எல்லை, நிலவெல்லைகளிலுள்ள பகுதிகளை அரசதந்திர முறையில் சுற்றிப் பார்க்கவேண்டிய அவசியம் உண்டு என்பதனாலேயே பெரியபாண்டியர் இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பட்டத்திற்கு வந்தபின் இத்தகைய சுற்றுப்பயணங்களைச் செய்யமுடியாதுபோகும். செய்ய முடிந்தாலும் அது தன்னிச்சையானதாகவும், சுதந்திரமானதாகவும் இராது. இவற்றையெல்லாம் புரிந்துகொண்டால் கோப்பெருந்தேவி இளையபாண்டியருக்கு முழுமனத்துடன் விடைகொடுக்க முடியும்" என்று முடிநாகன் எடுத்துக் கூறிய போதும்கூடக் கோப்பெருந்தேவி அரைகுறை மனநிலையில் தான் இருந்தாள். அவளுடைய மனநிலையை மகன் சாரகுமாரன் மூலமாகக் கேள்விப்பட்டு அநாகுலபாண்டியன் வந்து கடுமையாக எடுத்துக் கூறியபின்பே அவள் இணங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/116&oldid=490042" இலிருந்து மீள்விக்கப்பட்டது