பக்கம்:கபாடபுரம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

115


"மகனிடம் உனக்குப் பாசமும், அன்பும், இருக்கவேண்டியதுதான். ஆனால் அதற்காகக் கடமையை மறந்து விடலாகாது. அரச குடும்பத்துப் பிள்ளையைச் செல்வமாக வளர்க்க நினைப்பதைவிட அதிகமாக ஒரு தாய் அவனுக்கும், அவன் பிறந்தநாட்டிற்கும் வேறெந்தக் கெடுதலையும் செய்துவிட முடியாது என்பதை நினைவு வைத்துக்கொள். நீ இன்று உன் மகன்மேல் மட்டும் பாசம் காண்பிக்கிறாய்! அந்த மகனோ நானை இந்த நாட்டின் உயிர்க்குலத்தின்மேல் எல்லாம் பாசம் காண்பித்து ஆளவேண்டியவன். நாளைப் பரந்த பாசத்தைக் காண்பிக்க வேண்டியவர்களை இன்று நாம் குறுகிய பாசத்தால் வளர்ப்பதுகூடத் தவறு.

"குறுகிய பாசத்தால் பேணப்பட்டுச் செல்வப் பிள்ளைகளாகவும், சவலைப் பிள்ளைகளாகவும் வளர்க்கப்படுகிறவர்கள் நாளைப் பரந்த அன்பையும், பாசத்தையும், செலுத்த முடியாதவர்களாகிவிடுவார்கள். இளைய பாண்டியனைப் பழந்தீவுகளுக்கு அனுப்புவதற்கு நீ இணங்கவில்லை என்பது தெரிந்தால் பெரியபாண்டியரே உன்னிடம் பேசவருவார். அவர் எதிரே வந்துநின்றால் உனக்குக் கைகால் பதறும். பேசுவதற்குச் சொற்கள் வராமற்போய்விடும்..." என்று அநாகுலபாண்டியன் இவ்வளவெல்லாம் எடுத்துக் கூறிய பின்பே திலோத்தமை இதற்கு இணங்கினாள். பெரியபாண்டியர் தன் எதிரில் வந்துநின்று கடுமையான சொற்களில் திடமாக விவாதிப்பார் என்பதைக் கேள்விப்பட்டதும் அந் நிலை வரை போகவிடுவதில் பயனில்லை என்று தோன்றியது அவளுக்கு.

"நான் பெண் இதற்குமேல் அரசியல் காரணங்களின் விளைவுகளை மறுக்கச் சக்தியில்லாதவள். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்" என்று சோகம் இடறும் இனிய குரலில் கணவனுக்குப் பதிலிறுத்தாள் திலோத்தமை. இளைய பாண்டியனும், முடிநாகனும் பழந்தீவுகளுக்குப் பயணம் செய்வது உறுதியாயிற்று. சிகண்டியார், அவிநயனார் ஆகிய ஆசிரியர்களிடம் கூறி விடைபெறுவதற்காக அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/117&oldid=490043" இலிருந்து மீள்விக்கப்பட்டது