பக்கம்:கபாடபுரம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கபாடபுரம்


தங்கியிருந்த இடத்திற்குப் பேரப்பிள்ளையாண்டானாகிய சாரகுமாரனை அழைத்துக்கொண்டு போனார் பாட்டனார் வெண்தேர்ச்செழியர்.

"புலவர் பெருமக்களே! இலக்கண இலக்கியங்களையும் இசைக்கலையையும் நீங்கள் கற்பித்து விட்டீர்கள்! பரம்பரை பரம்பரையாக வரவேண்டிய அரசதந்திர முறைகளை இவனுக்குக் கற்பிப்பதற்காக நான் சில காரியங்களைச் செய்யப் போகிறேன். இந்த மா பெரும் பாண்டியர் மரபில் அரச குடும்பத்துச் சூழ்ச்சித்திறன் குறைவாகவும், ஒரு கலைஞனைப் போன்ற மென்மையும், இங்கிதமும், அதிகமாகவும் கொண்டு பிறந்திருப்பவன் இவன்தான். ஆகவே இவனைப்பற்றி மட்டும் நான் சற்றே அதிகமாகக் கவலைப்படவேண்டியிருக்கிறது. உங்களுடைய நூல்கள் கற்றுத்தரமுடியாத பல கடுமையான அனுபவ பாடங்களைக் கற்றுத்தர நான் ஏற்பாடு செய்யவேண்டியிருக்கிறது. இதை நீங்கள் எந்த விதத்திலும் தவறாகப் புரிந்துகொள்ளமாட்டீர்களென்று எனக்குத் தெரியும். ஆயினும் முறை கருதியும், நாகரிகம் நோக்கியும் உங்களிடம் விடைபெற இவனை அழைத்து வந்தேன்" என்று அவர்களிடம் பேச்சைத் தொடங்கினார் வெண்தேர்ச் செழிய மாமன்னர்.

"நமக்கெல்லாம் நிகழ்காலத்தைப்பற்றிய கவலைகள் என்றால் பெரியபாண்டியருக்கு எப்போதுமே எதிர்காலத்தைப்பற்றிய கவலைகள்தான்.... " என்று சிகண்டியாரிடம் சிரித்துக்கொண்டே விளையாட்டாகக் கூறினார் அவிநயனார்.

பெரியவர் விடவில்லை. "ஆம்! ஆம்! எனக்கு எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றிய கவலைதான். நிகழ்காலத்தைப் பற்றி நான் நினைத்துத் தயங்கிக் கொண்டிருக்கும் போதே அது கரைந்துபோய்விடுகிறது. இறந்தகாலத்தைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயனில்லை. நிச்சயமாக எனக்கு முன் நான் நினைக்கவும் திட்டமிடவும் முடிந்த காலமாக எதிரே மீதமிருப்பது எதிர்காலம் ஒன்றுதான். ஆகவே அதைப் பற்றி மட்டும் நான் நிறையக் கவலைப்டுவது நியாயம்தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/118&oldid=490044" இலிருந்து மீள்விக்கப்பட்டது