பக்கம்:கபாடபுரம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கபாடபுரம்


சூழ்நிலையில் அப்படிச் செய்வது சாத்தியமில்லை" என்று பெரியவர் தீர்மானமாக மறுத்த பின்பே சிகண்டியாசிரியர் அடக்கினார்.

இளையபாண்டியனும், முடிநாகனும், பழந்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்யும் செய்தி அரண்மனை வட்டத்தினரிலும் அரசகுடும்பத்தோடு பொறுப்பான தொடர்புள்ள சிலருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கமாகப் பட்டத்து அரசர்களோ, அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களோ கடற் பயணம் புறப்படும்போது பெரிய துறைமுகத்தில் கோலாகலமாகவும் அலங்காரமாகவும் வழியனுப்பும் வைபவம் நடைபெறுவதுண்டு. இந்த முறை அந்த அலங்கார வைபவங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டிருந்தன. பயணமே பொருநை முகத்துவாரத்தை ஒட்டினாற்போல் கடலிற் கலக்கம் சிறு துறைமுகத்தின் வழியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணம் புறப்படுமுன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளை ஒரு முறை பார்த்துச் சொல்லிவிட்டு வரவேண்டும் என்று இளையபாண்டியன் எண்ணியிருந்தும் அது இயலாமல் போயிற்று. கடைசி விநாடிவரை பெரியபாண்டியர் பல எச்சரிக்கைகளையும், செய்தியையும் அவனுக்குக் கூறிக்கொண்டே இருந்தார்.

சிறுதுறலாக மழை பெய்துகொண்டிருந்த மங்கலான நண்பகல் வேளை ஒன்றில் அவனும் முடிநாகனும், தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். பாட்டனாரும், தந்தை அநாகுலபாண்டியரும், அரசகுடும்பத்தினரும், சில புலவர்களும் வழியனுப்ப வந்திருந்தார்கள். அவர்களுடைய பாய் மரக்கப்பல் பொருநை முகத்துவாரத்திலிருந்து திருப்பத்தைக் கடந்து தென்பெருங்கடலில் பிரவேசித்தபோது காற்று அவர்கள் செல்லவேண்டிய திசைக்கு ஏற்றதாக வாய்த்திருந்தது.

கப்பல் கடலுக்குள் வந்ததும் தற்செயலாகத் தொலைவிலே தென்பட்ட புன்னைத் தோட்டமும் அதன் சுற்றுப்புறங்களும் இளையபாண்டியனின் கண்களிலே தெரிந்து கண்ணுக்கினியாளை நினைவூட்டின. அந்த நினைவோடு கப்பல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/120&oldid=490046" இலிருந்து மீள்விக்கப்பட்டது